தமிழ்நாடு டூ சீரடி செல்லும் ரயில்கள் நிறுத்தம் ஏன்? பக்தர்கள் சொல்லும் பகீர் பின்னணி தகவல்கள் !

தமிழ்நாட்டிலிருந்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சீரடிக்கு செல்லும் இரண்டு ரயில்களும் அறிவிப்பின்றி நிறுத்தப் பட்டதால் சீரடி சாய்பாபா பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தீவிர பாபா பக்தரும் வழக்கறிஞருமான சரவணன், இது குறித்து ‘மெட்றாஸ்குரல்’ இணையத்துக்காக தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.
“சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் புதன் கிழமை காலை 10.00 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.00 மணியளவில் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாயி நகருக்கு போய் சேரும். இந்த சிறப்பு ரயில் வண்டி, சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று வர கூடிய பாபா பக்தர்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் மந்திராலயம் மற்றும் கடப்பா மற்றும் மகாராட்டிரப் பகுதிகளுக்கு செல்லக் கூடிய மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருந்தனர். இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சீரடி சென்று மீண்டும் அதே இரயில் அடுத்த நாள் பயணம் செய்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வர, மொத்த செலவே சற்றேர ஆயிரம் ரூபாய்க்குள் முடிந்து விடும். தமிழகத்தில் கொரனா காலகட்டத்தில் பல ரயில் வண்டிகளின் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சிறப்பு ரயில் வண்டியும் அதே போல் நிறுத்த பட்டிருந்தது. இந்த வண்டியைப் போன்று மகாராட்டிரம் மாநில ‘நாகர்சூல்’ பகுதிக்குச் செல்லக் கூடிய ஓர் சிறப்பு ரயில் வண்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை காலை புறப்பட்டு மறுநாள் காலை திங்கள் கிழமை போய் சேரும். நாகர்சூலிருந்து சீரடிக்கு வெறும் 30கிலோமீட்டர் தொலைவுதான் என்பதால் தமிழகத்திலிருந்து சீரடிக்கு சென்று வரக்கூடிய சாய் பாபா பக்தர்கள் மற்றும் மூன்று மாநில மக்களும் பயன் படுத்தி கொண்டு வந்தனர். குறிப்பிட்ட இவ்விரு ரயில் வண்டிகளின் சேவைகளும் கொரனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப் பட்டன. இரண்டு ஆண்டிற்கும் மேலாக இந்த இரண்டு சிறப்பு ரயில் வண்டிகள் மட்டும் இயக்கப் படவில்லை. இது குறித்து தமிழகம், ஆந்திர மாநிலம் மற்றும் மகாராட்டிர மாநில மக்கள் ரயில்வே நிர்வாகத்தினரிடம் பல புகார்கள் அளித்தும் சரியான விளக்கம் ஏதும் அளிக்காமலும் மீண்டும் அந்த ரயில்கள் இயக்குவதற்கான எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. கிடைத்தது யாவும் மழுப்பலான பதில்கள்தான். “மேலதிகாரிகள், அமைச்சர்கள் தான் இரயிலை இயக்கக் கூடிய உத்தரவு பிறப்பிக்கனும் இதில் நாங்கள் ‌ஒன்றும் செய்ய முடியாது” என்றே பதில் தருகின்றனர். தமிழகத்தில் நிறுத்தப்பட்ட மற்ற இரயில் வண்டிகள் எல்லாம் இயக்கப் படும்போது இந்த சிறப்பு இரயில் வண்டிகள் இரண்டை மட்டும் இயக்க யாரும் முன் வரவில்லை. இவ்விரண்டு ரயில்களும் இயக்கினால் தனியார் விமானங்களின் வருமானம் பாதிக்கும் என்பதே முக்கியக் காரணம்! பெரும் வணிகப் புள்ளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடுகளுமே மூன்று மாநில மக்களின் சீரடிபாபா தரிசனத்துக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது எனலாம்… ஆயிரம் ரூபாயில் ஏழை மக்களும் ரெயிலில் போய் தரிசிக்கும் அளவு எளிமையான மகான் சீரடி பாபாவை கார்ப்பரேட் மூளையானது விமானத்தில் போய் தரிசித்தாலே உண்டு என்று மாற்றி வைத்துள்ளது. தனி நபர் ஒருவர் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து சீரடிக்கு போகும் சூழல் வலிந்து உருவாக்கப் பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனி நபருக்கே இவ்வளவு செலவு என்றால், குடும்பத்தோடு தரிசனம் செய்ய எவ்வளவு செலவிட வேண்டியிருக்கும்… வேறு ஏதாவது வழியில் செல்ல வேண்டும் என்றால் மும்பை இரயில் வண்டியில் ஏறி புனே அல்லது டவுன்ட் இரயில் நிலையத்தில் இறங்கி மீண்டும் நீண்ட தூரம் பயணம் செய்துதான் சீரடிக்குப் போக முடியும். பயண நேரம் – நாட்கள் அதிகமாவதாலும் மொழிப் பிரச்சினை காரணத்தாலும் விமானத்திலேயே சென்று விடலாம் என்ற சூழலுக்கு மக்கள் தள்ளப் படுகின்றனர். மத்திய மாநில அரசுகள் சரியான முறையில் இதை விசாரித்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சீரடி சாயிநகர்க்கும், நாகர் சூல் செல்வதற்கும் அரசு முன் வரவேண்டும். திட்டமிட்டு ரெயில்கள் இயக்கத்தை முன் அறிவிப்பின்றி நிறுத்தியதற்கும் உள்ள பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்கிறார், சீரடி பாபா பக்தரும், வழக்கறிஞருமான க.ப.சு. சரவணகுமார்.

– ‘விகடகவி’ எஸ். கந்தசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *