விளிம்பு நிலை பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். சந்திப்புக்கு அனுமதி கேட்டிருப்பார்கள், கிடைத்திருக்கும் என்று சாதாரணமாக அந்த சந்திப்பை நம்மால் கடந்து போக முடியவில்லை! சந்திப்பின் போது, “நீங்க எல்லாரும் நல்லாருக்கீங்களா? உங்க பேரென்ன?” – முதலைமைச்சர் கேட்கிறார், பெயர்களை சொல்லுகின்றன பிள்ளைகள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அருகிலிருக்கிறார். முதலமைச்சரிடம், மாணவிகளின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விளக்குகிறார். முதலமைச்சரிடம் அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாணவி திவ்யா, “உங்களை பலமுறை விழாக்களில் பார்த்திருக்கிறேன் அங்கிள்… நேரில் பார்க்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வந்த போது கூட நீங்கள் இவ்வளவு நேரம் எங்களோடு பேசுவீர்கள் என்று நினைத்தே பார்க்கவில்லை அங்கிள்… எங்க அப்பாவிடம் எங்களுக்கான தேவையை எடுத்துச் சொல்லலாம் என்று நினைத்தேன் அங்கிள்… பெண்கள் என்னுடைய பெண் பிள்ளைகள்னு நீங்க ஒருமுறை சொன்னீங்க அங்கிள்… அப்பாவிடம் கேட்பதை விட அப்பா ஸ்தானத்தில் இருக்கும் அங்கிளிடம் (முதலமைச்சர்) கேட்கலாம் என்றுதான் உங்களிடம் சொல்கிறோம் அங்கிள்…” – எந்த தயக்கமும் இல்லாமல் வெகு இயல்பாக பேசிக்கொண்டே போகிறார் மாணவி திவ்யா… “என்னன்னு பாத்துட்டு நான் செய்து தரேன், நீங்க பத்திரமா போங்க” … என்று அவர்களை வழியனுப்பி வைக்கிறார் முதலமைச்சர் … ஐந்து நிமிடத்துக்கும் குறைவான சந்திப்பில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை எட்டுமுறை அங்கிள் என்றே சாதாரணமாக குறிப்பிட்டுப் பேசுகிறார் மாணவி திவ்யா… சார் என்றோ அய்யா என்றோ அழைக்காமல் அங்கிள் என்று சொந்தம் போல் நினைத்து அழைக்கலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது சாதாரண ஒன்றல்ல! “தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது” என்று ட்வீட் போட்டிருக்கிறார், முதலமைச்சர் … – ந.பா.சேதுராமன் –