(1) சென்னை சத்யம் தியேட்டரில் இருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து விபத்து ! சென்னை திருவல்லிக்கேணி, அசுதிகான் தெருவைச் சேர்ந்தவர் மோனிகாஸ்ரீதேவி. கணவருடன் சத்யம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பும் போது, சத்யம் தியேட்டர் நிர்வாகம் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு, மோனிகாஸ்ரீதேவி மீது விழுந்ததில் அவர் மயங்கி விழுந்தார். கணவர் கவுதம், மோனிகா ஸ்ரீதேவியை மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். சம்பவம் குறித்து அண்ணாசாலை போலீசார் விசாரித்து வருகின்றனர். (2) ஆன் லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தற்கொலை!
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் காந்திராஜன். வேளச்சேரியில் உணவக வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடியதில் ரூ.2லட்சம் வரை இழந்துள்ளார். இந்நிலையில் 13ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தவர், ஃபேன் ஊக்கில் நைலான் கயிறால் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். தண்ணீர் கேன் போட வந்த நபர் ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு குமரன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து சடலத்தை கைப்பற்றி அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். தொடர் விசாரணை நடக்கிறது.
(3) ஆன்லைன் மூலம் 35 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கு போலி மருந்தை அனுப்பி நடந்த மோசடி குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. குன்றத்தூரில் ஆட்டோ கேர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். LINKED IN என்ற ஆன்லைன் மூலம் ஜெர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் கட்ஸ்மித் மற்றும் பூஜாகுமார் ஆகியோருடன், முருகையா, வணிக ரீதியான நட்பை வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மத்தியாஸ் கட்ஸ்மித் ஜனவரி 2022 ல் Byousma Actire Liquid Chhinacca என்ற மருந்தை, முருகையாவுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. முதல் தவணையாக 26,05,000/- ரூபாயும், இரண்டாவது தவணையாக ரூ.9,18,000 -மும் என மொத்தம் ரூ.35,23,000/- ஐ ஆன்லைன் மூலம் மத்யாஸ் கட்ஸ்மித்துக்கு முருகையா அனுப்பி வைத்தாராம். பணத்தை செலுத்திய பின்னர், அவை போலியானது என தெரியவர, 13.04.2022-ஆம் தேதி ஆதம்பாக்கம் போலீசில், முருகையா புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசார், வழக்கை சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றியுள்ளனர்.
(4) நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்பட டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாக ரசிகர் மன்றத் தலைவர் கைது. சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர்
வேல்முருகன். விஜய் மக்கள் இயக்கத்தின் விருகைப்பகுதி தலைவராக உள்ளார். விஜய் நடித்த பீஸ்ட் திரைப்பட ரசிகர் மன்றத்தின் 180 டிக்கெட்டை மன்றத்தின் சார்பில் காசி டாக்கீஸ் தியேட்டரிலிருந்து வேல்முருகன் வாங்கியதாக தெரிகிறது. வாங்கியதில் 46 டிக்கெட்டை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டு மீதி 134 டிக்கெட்டை தியேட்டர் கவுண்டர் அருகே அதிக விலை வைத்து வேல்முருகன் விற்றாராம். இது குறித்து தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் பலவேசம், வேல்முருகனைப் பிடித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். பின்னர் சொந்த ஜாமீனிலேயே அவரை விடுவித்தார்.
(5) மனைவியை கொலை. செய்த வழக்கில் ஆசாமிக்கு அபராதம் – ஆயுள் தண்டனை… மகிளா நீதிமன்றம் தீர்ப்பு ! சென்னை கிண்டி போலீஸ் லிமிட், மசூதி காலனியைச் சேர்ந்தவர், பென்சால பிரசாத். தோசை மாவு விற்கும் கடை நடத்தி வந்தார். ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த உஷாராணி, இவருடைய மனைவி ஆவார். குடும்பப் பிரச்சினையில் உஷாராணியை, (19.01.2020- அன்று) வாஷிங் மெஷின் டியூப்பை எடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு , வழக்கை விசாரித்து வந்த நிலையில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தார். மகளிர் அமர்வு நீதிமன்றம் ( சென்னை அல்லிகுளம்) நீதிபதி முகமது பாருக் முன்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்த்தி வாயிலாக விசாரணை முடிக்கப்பட்டு பென்சால பிரசாத் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட்டது. ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அபராதம் கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் என தீர்ப்பானது.
(6) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பாஜக விசிக இடையே மோதல் ! போலீசார் உள்பட 8 பேர் காயம்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பாஜகவினரும் மோதிக் கொண்டதில் போலீசார் உள்பட 8 பேர் காயமடைந்தனர். பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாளான இன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல் திருமாவளவன் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
அடுத்தபடியாக பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருந்தனர். அப்போது சாலையில் நின்றிருந்த விசிகவினரும், பாஜகவினரும் திடீரென மோதிக் கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மோதலில் பாஜக, விசிக மற்றும் காவல் துறையினர் 2 பேர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. கோயம்பேடு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
– விகடகவி எஸ். கந்தசாமி மற்றும் பிரீத்தீ எஸ்.