
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாளாக, இன்றைய நாள் அமைந்து விட்டது. திக்கித்து நிற்போர் ஒருபுறம் இருக்க, இப்படியான சூழலிலும் மவுனித்து மய்யமாய் நிற்போரும் இருக்கவே செய்கிறார்கள். யாரையும் திட்டக்கூட வேண்டாம். ஒரு இரங்கல், காயமுற்றோர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஒரு அறிக்கை… 😡
சரி போகட்டும்.😡
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தவிர, ஆல் இன்டியா பார்ட்டிமுதல், அங்கீகாரம் இழந்திருக்கும் பார்ட்டிவரை, வருத்தமும், இரங்கலும், தெரிவித்திருக்கிறார்கள்.
யாருடைய கட்சியின் பிரசார நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்களோ, அந்தக் கட்சியின் தலைவர் விஜய் மட்டும் ஒன்றும் பேசாமல் ஏர்போர்ட்டுக்கே போய்விட்டார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கோ, விரும்பும் இடத்துக்கோ, போய்விடுவார்.
நாட்டின் பிரதம அமைச்சர், குடியரசுத் தலைவர், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என பலரும், செத்துப்போன 38 பேருக்கும் இரங்கல் தெரிவித்தும்; நூற்றுக் கணக்கில் சிகிச்சையிலிருப்போர் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடமான கரூர் – நாமக்கல் பகுதியில், திறந்தநிலை பிரசாரவேனில் நின்றுகொண்டு, த.வெ.க. தலைவர் விஜய், இன்று பேசிய பேச்சுகள் வரிக்கு வரி; அடுத்துவருகிற நாள்களில் அவருக்கே எதிராகத்தான் நிற்கப் போகிறது.
துபாய் பயணத்தை அவசரகதியில் ரத்து செய்துவிட்டு கரூர் போயிருக்கிறார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தலைமைச் செயலகத்தில் அவசரக்கூட்டத்தை, அனைத்துத்துறை அதிகாரிகள் – அமைச்சர்களுடன் நடத்தி முடித்துவிட்டு; துணை முதலமைச்சர் பயணப்பட்ட சில நிமிடங்களிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கரூர் போக தயாராகி விட்டார்.
இன்று நள்ளிரவு 1மணியளவில் கரூர் போய்விடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கலான காலகட்டங்களில், உணவு உறக்கம் தொலைத்து நள்ளிரவில் கூட பயணத்தை மேற்கொள்ளக்கூடிய முதலமைச்சரைப் பார்த்தும்; சக அரசியல் கட்சித் தலைவர்களைப் பார்த்தும்; இனிவரும் காலங்களில் எப்படிப் பேசுவது என்று திரு. விஜய் ஒரு முடிவெடுத்துக் கொள்ளவேண்டும்.
கோட்டையில் கலந்தாய்வு முடிந்த கையோடு, ஓய்வு நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பித்ததோடு; இறந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் தலா 10லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்; முதலமைச்சர். இன்னும் அதிகநிதி வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், நடிகர் விஜய்யிடம் அந்த கோரிக்கையை வைத்து உதவிபெற்றுத்தரலாம். ஏற்கெனவே பிரசார பயணங்களில் நாற்காலிகளை உடைப்பது, ஃபேரிகார்டு (தடுப்பு கம்பிகள்) வளைப்பது- நொறுக்குவது என்று; நிறையமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது தவெக பிரசார காட்சிகள் என்பதை; கவனத்தில் கொள்வது நல்லது.
மத்திய உள்துறை இதுபோன்ற இக்கட்டான நிலைகளின் போது அறிக்கை கேட்பது வழக்கம். இப்போதும் கேட்டிருக்கிறார்கள், சொல்லுங்கள் இப்படி : “போலீசார் அனுமதித்த நேரத்தை விட நான்கு மணி நேரம் கழித்துதான், பிரசாரத்துக்கு திட்டமிட்ட இடம் நோக்கி தவெக தலைவர் எப்போதும் வருகிறார்; போகிறார்; இன்று நாமக்கல் வந்ததும், சொன்ன நேரத்தைவிட 4மணி நேரம் தாமதித்துதான். பாதுகாப்பு கருதி போலீஸ் தருகிற அனுமதிக்கப்பட்ட. இடத்தை எப்போதும் மறுத்து விட்டு, வேறோர் இடத்தைதான் தேர்வு செய்கிறார் திரு.விஜய். மெட்ராஸ் ஐகோர்ட், தவெகவின் பிரசார கூட்டத்துக்கு விதித்த நிபந்தனைகளை பின்பற்றுவது இல்லை; பாதுகாப்புக்கு வருகிற போலீசாரின் அறிவுறுத்தலை, ஆளுங்கட்சியான திமுகவின் மிரட்டல் என்று மடை மாற்றுவதை கடமையாக செய்கிறார் விஜய்” என்று அறிக்கை கொடுங்கள்; தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் அவர்களே…
நான் கேப்டனின் தம்பி என்று சொன்னால் மட்டும் போதாது, கேப்டன் போல ஒற்றை விரலசைவில்; ஒற்றை குரலொளியில்; ஒட்டுமொத்த தொண்டனையும் கட்டிப்போடும் ஆளுமையும் சேர்ந்தே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அந்தத்தகுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.
சரி, இதுகூட நாள்கள் பிடிக்கும், வளர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம் ஆயிற்றே…
இதே கரூரில், இப்படியான பிரமாண்ட மாநாட்டை, ஆளுங்கட்சியான திமுக, கொஞ்ச நாள்களுக்கு முன்னர் நடத்தியது; காயம் இல்லை; மயக்கம் இல்லை; அதிகபட்சமாய் யாரும் சாகவில்லை; எப்படி இது சாத்தியப்பட்டது என்று யாராவது ஒரு கரைவேட்டியை கேட்டு அறிந்து கொண்டிருக்கலாம். அதுவும் பிடிக்கவில்லையா, அதிமுக தரப்பில் கேட்டிருந்தால்கூட சொல்லி இருப்பார்கள்; இதைவிட பலமடங்கு பிரமாண்ட கூட்டம்- மாநாடுகளை போட்ட கட்சி அது…
வழிநெடுக குண்டும் குழியுமாய் சாலைகள் இருந்ததால் கால்தடுக்கிதான் மொத்தபேரும் செத்துப்போனார்கள் என்று யாரும் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அசிங்கப்பட்டு விடாதீர்கள்…
நெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் இறந்துள்ளனர். 20 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடம் என்று வருகிற தகவல்கள் உறக்கத்தை பல நாள்களுக்கு கெடுத்து வைத்திருக்கிறது.
ந.பா.சேதுராமன்