Madras Kural

பல்கலைகழக பட்டத்தை மறுத்த பேராசிரியர்கள்…

மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்டமளிப்பை ஏற்க மறுத்த பேராசிரியர்களுக்கு ‘பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ பொதுச் செயலாளர், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கை:

தங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட இருந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசிரியர் சுரேஷ் மற்றும் பேராசிரியர் சி. ரமேஷ் ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்!

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த TNGCTA, MUTA, MUFA ஆகிய ஆசிரியர் அமைப்புகளுக்கு பாராட்டுகள்! இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியை அவமதிக்கும், பல்கலைக்கழகம் சுதந்திரமாக செயல்படுவதை அனுமதிக்க மறுக்கும், பல்கலைக் கழகத்தின் வேந்தராக பொறுப்பு வகிக்கும் ஆளுநர் கையால் முனைவர் பட்டம் பெற மறுத்த தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுரேஷ், மூட்டா முதலாம் மண்டலத்தின் தலைவர் பேராசிரியர் சி. ரமேஷ் ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

ஆசிரியருக்கு உண்டான முழு இலக்கணத்துடன் நடந்து கொண்டுள்ள பேராசிரியர் சுரேஷ், பேராசிரியர் ரமேஷ் ராஜ் ஆகியோர் வாழ்க! மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுவில் இருக்கும் TNGCTA, MUTA, MUFA ஆகிய அமைப்பின் Senate மற்றும் Syndicate உறுப்பினர்கள் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து ஆசிரியர்களின் கண்ணியத்தையும், பல்கலைக்கழகத்தின் மாண்புகளையும் காத்துள்ளனர்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு மிகப் பெரும் ஊக்க சக்தியாக விளங்கியவர்கள் ஆசிரியர்கள். பிரிட்டிஷ் அரசுக் கல்லூரிப் பணியில் இருந்து விலகி ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவர்கள் அன்றைய ஆசிரியர் பெருமக்கள்.

விடுதலைப் போராட்ட உணர்வுகளுடன் இந்திய மக்களின் இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவம், மக்களாட்சியின் மாண்புகள், பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரம் ஆகியவற்றை காத்திட இன்று (நவம்பர் 2, 2023) மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ள ஆசிரியர் அமைப்புகளுக்கும், தங்களின் நேரத்தை செலவிட்டு, கடும் உழைப்பின் பயனால் தாங்கள் பெற இருந்த முனைவர் பட்டம் வழங்கிடும் விழாவை புறக்கணித்துள்ள பேராசிரியர் பெருமக்களுக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மெக்கார்த்திசத்தை (McCarthyism) எதிர்த்துப் போராடுங்கள் என்று ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அன்று அறைகூவல் விடுத்தார். விடுதலை இந்தியாவில், மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை காத்திட எத்தகையத் தியாகத்தையும் செய்ய இந்திய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்தே அறைகூவல் விடுத்தார்.

இன்றைய பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ள TNGCTA, MUTA, MUFA ஆகிய அமைப்புகளின் பேராசிரியர் பெருமக்கள் இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் மக்களிடம் இறுதி இறையாண்மைக் கொண்ட, சோஷலிச, சமயச் சார்பற்ற, ஜனநாயக குடியரசான இந்தியாவை காத்திட உழைக்கும் வர்க்கமாக ஆசிரியர்கள் அணித் திரள்வார்கள் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் காத்திட வர்க்க ஒற்றுமை ஓங்கட்டும் ! -இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version