Madras Kural

தவெகவில் இணையும் அதிமுக விஐபிகளின் கதை.

சொல்லிக்கொள்வது போல பெரிதாய் உழைப்பை போட்டிருக்க மாட்டார்கள், ஆனால் பலனோ பெரிய அறுவடையாக இருக்கும். யாரோ ஒருத்தரோட உழைப்பு இவர்களைப் போன்றவர்களுக்கு ‘அது’ -இஷ்டம் போல கொட்டுவதைத்தான் அதிர்ஷ்டம் என்பார் போலிருக்கிறது.

அது இஷ்டம் துர் இஷ்டம் குறித்து நண்பனோடு பேசிக்கொண்டிருந்த போது சில நாயகர்கள் நினைவில் வந்தனர்.

திரு. பீதாம்பரமும் திரு. ராமச்சந்திரனும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. 1921 -ல் கேரளமண் திருச்சூர்ல பிறந்த என்.பீதாம்பரமும், அதே மண்ணின் மருதூர்ல 1917-ல் பிறந்த ராமச்சந்திரனும் அப்படியான நாயகர்கள்.

1927-ல் திருச்சிக்கு அண்ணன் சக்ரபாணி துணையோடு ராமச்சந்திரனும், எந்தத் துணையுமே இல்லாம 1931-ல் மெட்ராஸ் கோடம்பாக்கம் ஏரியாவுக்கு பீதாம்பரமும் வந்து சேர்ந்தாங்க. ஸ்டூடியோவில் மேக்கப் மேன் ஒருத்தர்கிட்ட உதவியாளரா பீதாம்பரமும், சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ்ரோடு ஒற்றைவாடை நாடக கம்பெனியில ராமச்சந்திரனும் சேர்ந்து உழைக்க ஆரம்பிச்சாங்க. ராமச்சந்திரன் உழைப்பால உச்சம் தொட்டு டாப் ஹீரோ ஆனார். மருதூர் கோபால கிருஷ்ணமேனன் மகனான ராமச்சந்திரன் எம்ஜிஆர் ஆனார்.

தமிழ்நாட்டு சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர். என மூன்றுமாநில சூப்பர் ஸ்டார்களின் முகமாகவும், ‘முக’ வரியாகவும் அதே காலகட்டத்தில் பீதாம்பரம் வளர்ந்தார். அடிமைப்பெண் எம்ஜிஆர் பாத்திரம், கர்ணன் படத்தில் என்டிஆரின் கிருஷ்ணர் பாத்திரம் யாவும் பீதாம்பரத்தின் கைவண்ணமே.

எம்ஜிஆர் 1987-ஆம் ஆண்டும், பீதாம்பரம் 2011-ஆம் ஆண்டும் காலமாகிப் போனார்கள். எம்ஜிஆருக்கு நேரடி வாரிசு இல்லாததால் அவருடைய வாரிசு குறித்து பேசமுடியாது. பீதாம்பரம் வாரிசு குறித்து பேசமுடியும். அப்பா பீதாம்பரம் போலவே மகன் வாசு கடின உழைப்பாளி. தானே விழுந்து எழுந்து நடக்கும் மழலைபோல சுறுசுறுவென சுழன்ற வாசுவை கிளாசிக் இயக்குநர் ஸ்ரீதர் உடன் சேர்த்துக்கொண்டார். இளமை ஊஞ்சலாடுகிறது வரை உதவியாளராய் ஓட்டம் இருந்தது. பிற்காலத்தில் சந்தான பாரதியாக மாறிய பாரதியோடு கைகோத்து பாரதி -வாசு, பன்னீர்புஷ்பங்கள் கொடுத்தனர். பின்னர் தனித்தனியே படம் பண்ணத் தொடங்கினர்.

என் தங்கச்சி படிச்சவ என்ற வெற்றிப் படத்தில் சினிமா கணக்கைத் தொடங்கி, சின்னத்தம்பி, மன்னன், வால்டர் வெற்றிவேல், சந்திரமுகி என பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்து பீதாம்பரம் மகனாக இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக வெற்றியைக் குவிக்க ஆரம்பித்தார், P.வாசு.

பி.வாசுவின் சகலை, சென்னையில் நீண்ட கால அரசியல்வாதி. அதிமுக காரர். சசிகலா அம்மையாருக்கு இருந்த ஒரு நல்ல பழக்கம், ஜெயலலிதா அம்மையாருக்கு இருந்ததா என தெரியவில்லை. எம்ஜிஆர் காலத்து ஆட்கள், அவர்களோடு தொடர்பில் இருந்த ஆட்கள், அவர்களின் உறவுகளைத் தேடித் தேடி பிடித்துக்கொண்டு வந்து அம்மையார் ஜெயலலிதா முன் நிறுத்தி, ‘இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்து விடுவார். சசிகலா அம்மையார் குறித்த ஜெயலலிதாவின் புரிதலால் பலருக்கு அந்தவகையில் புதுவாழ்வு அமைந்துபோனது.
அப்படி மறைதிரு பீதாம்பரம் மகன் பீ.வாசு என்பாரின் சகலையான நா.பாலகங்கா என்பவர் சசிகலா அம்மையார் மூலம் இன்னாரின் உறவினர் என கார்டனில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நா.பாலகங்காவுக்கு எம்.பி., எம்எல்ஏ, மேயர் என அடுத்தடுத்து வாய்ப்புகளை அம்மையார் வாரி வழங்கினார். தோற்றுக்கொண்டே இருந்தவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்கி டெல்லிக்கு அனுப்பி அழகு பார்த்தார். நிரந்தர மாவட்டச் செயலாளராக தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார். நிரந்தர எதிர்க்கட்சியான திமுகவை எதிர்த்து வாழ்நாளில் ஒரு அறிக்கைகூட கொடுக்காத பாலகங்காவுக்குத்தான் எத்தனை எத்தனை வாய்ப்புகள். தலைகுப்புற கவிழ்க்கும் தோல்விகளின் காரணியாக எந்நாளும் இருப்பவை தலைமைகளே தவிர தொண்டன் இல்லை.

நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் துறைமுகம் தொகுதியை ராயபுரம் மனோவுக்கு கொடுத்திருந்தார் எடப்பாடி. “பாலகங்காவுக்கு ஏன் தரவில்லை?” என்று உள்ளூர் தொண்டர்கள் சிலரிடம் கேட்ட போது, “திமுக வேட்பாளர் சேகர்பாபுவுக்கு பாலகங்காவின் விலை தெரியும் என்பது எடப்பாடியாருக்கும் தெரியும்” என்றனர்.

துல்லியமாய் கணக்குப்போட்டு காய் நகர்த்துவதில் எடப்பாடியார் சமர்த்துதான் போல…

தவெகவில் இணைந்திருக்கும் திரு. நா.பாலகங்கா மற்றும் “மக்கள் பணி செய்யாமல் உறக்கமே வரவில்லை” என்று துடிதுடித்துப்போய் இணைந்திருக்கும் பலருக்கும் எதிர்கால வெற்றிக்கான வாழ்த்துகள்.

ந.பா.சேதுராமன்
(13.06.2026)

(அதே வேளையில் பீ.வாசு உள்ளிட்ட எண்ணற்றோர் தங்களின் உயர்வுக்காக போயஸ் கார்டனையோ ராமாவரம் தோட்டத்தையோ பயன்படுத்திக் கொண்டது இல்லை என்பது வேறு)

Exit mobile version