Madras Kural

காதலுக்காக தற்கொலையா ? திருந்தப்பாருங்கள்…

சென்னை மாம்பலம் போலீசார், விசாரிக்கும் ஒரு வழக்கு இது !
காதலர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு அது எல்லை மீறிப்போக, ‘லைசால்’ என்ற திரவத்தை குடித்துள்ளார், காதலி. ’நீ எதைக் குடித்தால் எனக்கென்ன, எக்கேடு கெட்டும் போ’ என்ற ரீதியில், காதலியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிராதரவாக விட்டுச் சென்றிருக்கிறார், அந்தக் காதலன். கோயம்பேட்டில் இருந்தவர்கள் மீட்டு, அந்தப்பெண்ணை, அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவைச் சேர்ந்தவர் ஓவியா (பெயர் மாற்றம்). காதலன் சசிகுமாரை தேடிக்கொண்டு 25-ஆம்தேதி சென்னை தி.நகர் வந்துள்ளார். தி.நகரின் பிரபலக்கடையில் சேல்ஸ்மேனாக இருக்கும் காதலனையும் சந்தித்துள்ளார். சந்தித்த இடத்தில், இருவருக்கும் தகராறு ஏற்படவே, ‘லைசால்’ குடித்துள்ளார். அதன் பின்னர் நடந்ததுதான் மேலே சொல்லி இருப்பது…
சென்னை மெரீனா போலீசார், விசாரிக்கும் ஒரு வழக்கு இது !
பேஸ்புக் மூலம் பழக்கமாகி டைரக்டர் ஆக்குவதாக வாக்குறுதி அளித்து ஐந்து லட்சரூபாய் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதோடு, ரகசியமாக திருமணமும் செய்து கொண்டு ஏமாற்றிய ஆசாமி மீது நடவடிக்கை கேட்டு பலமுறை புகார் அளித்துள்ளார் ஒரு பெண். நடவடிக்கை ஏதும் இல்லாததால் போலீஸ் டி.ஜி.பி. அலுவலக வாசலில் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தவரை மீட்டு விசாரணை நடத்தி வருகிறது போலீஸ்.
தற்கொலைக்கு முயற்சித்த பெண், பரமேஸ்வரி (எ) பைரவி. சென்னையைச் சேர்ந்தவர். கணவர் சம்பத் இறந்துவிட்டார். வேலூர் கஸ்பாவை சேர்ந்த ராஜா தேசிங்கு சுப்பிரமணி என்பவர்மீதுதான், பரமேஸ்வரி என்கிற பைரவி, இத்தனை குற்றச்சாட்டுகளையும் வைத்துள்ளார்.
” இளமை இதோ இதோ படத்திற்கு உன்னை டைரக்டர் ஆக்குவேன் என்று சொல்லிதான் நகையையும், பணத்தையும் ஏமாற்றி வாங்கியதோடு, ரகசியத் திருமணமும் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் “ என்பது, புகாரின் இன்னொரு பகுதி.
சென்னை புழல் போலீசார், விசாரிக்கும் ஒரு வழக்கு இது !
காதலித்து வந்தவர், திடீரென பேசாமல் நிறுத்திவிட்டாரே என்ற வேதனையில், எலி மருந்து சாப்பிட்ட பெண், இறந்து விட்டார். இறந்த பெண், சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர், வயது 16, படிக்கும் வகுப்பு பிளஸ் ஒன்.
எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்த சமூகம் ?
-ஏ.எஸ்.ராஜ் –

Exit mobile version