
படத்தில் இருப்பவர் யுவராஜ். போக்குவரத்துத் துறையில் அதிகாரி. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரைச் சேர்ந்தவர். இப்போது உயிரோடு இல்லை. இல்லாமல் போனதற்கு காரணம் இருவர். யுவராஜ் எழுதிய கடைசி கடிதத்தின் அடிப்படையில் தாம்பரம் இருப்புப்பாதை போலீசார், அந்த ‘காரண’ இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்லூரிகளில் நடக்கும் ராகிங் போல, பணியிடங்களில் வேறு மாதிரி நடக்கும் ‘ராகிங்’ கால் இப்படி பலர் தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர். மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனையின் இளநிலைப் பொறியாளராக (ஜே.இ.) இருந்தவர் யுவராஜ். கழுத்து வலி காரணமாக, 12.8.2025 முதல், யுவராஜ் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்காததோடு, வேலைக்கு வரவும் கூடாது என உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததும்; இதற்கிடைய நடந்திருக்கும் மற்றுமொரு அநீதி. யுவராஜ் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தும், உயரதிகாரிகள் அதை ஏற்கமறுத்து, நிராகரிப்பு செய்தது அடுத்தகட்ட நெருக்குதல். கூடுவாஞ்சேரிக்குப் பக்கத்திலேயே இருக்கிற மறைமலைநகர் ‘ட்ராக்’ கில், ரெயில் வரும்போது முன்பாய்ந்து யுவராஜ், உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். பணியிட அழுத்தங்களில் ஆண் -பெண் பாகுபாடு எப்போதுமே இருப்பதில்லை போலிருக்கிறது.
கோவிந்தராஜ் -சொர்ணலதா என்ற இரண்டு உயரதிகாரிகளின் டார்ச்சரே, என்னுடைய இந்த முடிவுக்குக் காரணம் என்ற கடிதத்தை, தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.க்கு மெயிலில் அனுப்பி வைத்து விட்டே; இறப்பு முடிவை எடுத்திருக்கிறார் யுவராஜ். தமக்குக் கீழே பணியாற்றும் அனைவரையும், அடிமைகளாகவே நினைக்கும் அதிகாரிகளை, மனநலக் காப்பகத்தில் வைத்து, உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே மனிதஉயிர்கள் பறிபோகாது தடுக்கமுடியும்.
தற்கொலை தீர்வு அல்ல
ந.பா.சேதுராமன்