Madras Kural

எங்கே போயின இசைக்குழுக்கள்!

ரோஜா… ரோஜா… பாடலை மேடைக் கச்சேரியில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சத்யன் பாடியிருக்கிறார். இப்போது அதை இசை ஆர்வலர்கள் மீண்டும் லைக் கொடுத்து பட்டன் தட்டி ஷேர் செய்ய, வடசென்னை பெரம்பூர் சத்யனை நேர்காணல் எடுக்க உள்ளூர் யூடியூப் முதல்; தலைநகர் டெல்லியில் இயங்கும் சாட்டிலைட் சேனல்கள் வரை; மைக்கையும், கேமராவையும் கொடுத்து பல கோணங்களில் சத்யனை படம் பிடிக்க ஆள்களை அனுப்பிவிட்டனர்.

கோயில் விழாக்களிலும், திருமண வீடுகளிலும், குடும்ப நிகழ்வுகளிலும் சற்றேர இருபது ஆண்டுகளாகவே; மெல்லிசை மேடைக்கச்சேரி செய்வோர் பயன்படுத்தப் படுவது இல்லை. நீளமான பீரோவை கவிழ்த்துப்போட்டது போல் கருப்பு கலரில் இருக்கும் ஒரு பெட்டிதான் இப்போது எல்லா வேலையையும் செய்கிறது. எந்தமாதிரி பாட்டு வேண்டும், எவ்வளவு சவுண்ட் வேண்டும்; ஸ்டாப் என்றதும் மணியடித்தாற்போல நிறுத்தும் நிலை வேண்டும் – போன்ற வேண்டல்கள் யாவும் அந்த கருப்புப்பெட்டி நிறைவேற்றி விடுகிறது. 25 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, லட்ச ரூபாய் வரைக்கும் கூட அதில் ரெடிமேட் இசையை கேட்கலாம்; அதுவே 10 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிலும் இசை கேட்கலாம் என்றான பிறகு; மெல்லிசைக் கச்சேரிகளில் பாடியவர்கள் முகமும் முகவரியும் மெள்ள மெள்ள மக்களின் மறதி ஏரியாவுக்குள் போய் விட்டது.

1987-ஆம் ஆண்டு, லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு சென்னை ராயபுரம் சுழல்மெத்தை ஏரியாவிலும் அடுத்த ஆண்டு அதற்குப் பக்கத்திலேயே சங்கரின் சாதகப்பறவைகள் குழுவும் உருவானது. அதே காலகட்டத்தில் ராஜேஷின் ரிதம்ஸ் குழுவும்,
ராயபுரம் கல்லறை சாலையில் ரகுராஜ் சக்கரவர்த்தி இசைக்குழுவும் அதே காலகட்டத்தில் தோன்றியதுதான். நடிகர் கருணாஸின் ‘கருணாஸ் இசைக்குழு’ வும் அதேகாலகட்டத்தில் வலுவாய் இருந்தது.

25 குரல்களில் பாடி உலகசாதனை செய்த கோபால்சர்மா, அப்போது லஷ்மன் ஸ்ருதியில் பாடிக் கொண்டிருந்தார். சென்னை பிரசிடென்ட் காலேஜில் தொடங்கி, பேருந்து- ரெயில்களில் கதவுகளை கைகளால் அடிக்காமல் தபேலா கிதாருடன் வருவோரை வரவேற்க பொதுமக்களே காத்துக் கிடந்து ரசனையுடன் வரவேற்ற காலமது. பாலாஜி – சீலிமா, சுகுமார் – ஈநாக், லட்சுமணன் (தனி) என்று தனித்தனியே மாநிலக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட இசைப்புயல்கள் அனைத்துமே ஸ்ருதி என்ற பெயரை முன்னால் போட்டுக் கொண்டன. லட்சுமணன், லஷ்மன் ஆனார். ராமன் பெரியவர். லட்சுமணன் இளையவர். இரட்டையர்கள் இணைந்து லஷ்மன் ஸ்ருதியை உலகளவில் கொண்டு போயினர். லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு தொடக்ககால கட்டத்தில் மாநிலக் கல்லூரிக்கே பலமுறை நேரில் வந்து அடிக்கடி உற்சாகப்படுத்தியவர்களில் முதல்மனிதனாக அண்ணன் டி.ஆர். அவர்களைத்தான் சொல்ல வேண்டும்.

ஒருதலைராகம், ராகம்தேடும் பல்லவி, உயிருள்ளவரை உஷா, இரயில் பயணங்களில் என்று பிஸியாக இருந்த காலகட்டத்தில் கூட கல்லூரி மரங்கள் சூழ மையமாய் அமர்ந்து கதைத்த காலமும் எப்போதும் இனிக்கத் தக்கதே.

அடுத்ததாக நகரின் எல்லாத் திசையிலும் ப்ளாக் அன்ட் வொய்ட் சீருடை. காதோரத்தில் கற்றையாய் ஒன்றே போல் தொங்கும் மயிர்க்கொத்து என்று வித்தியாச கெட்டப்பில் கருணாஸ் தனி ஆவர்த்தனம் செய்து மிரட்டிக் கொண்டிருந்தார். கருணாஸ் சினிமாவுக்குப் போனதைவிட அந்த இசைக்குழுவை கைவிட்டதுதான் பெரிய வலி.

கருணாஸின் மனைவி கிரேஸ் அதேபோல் லஷ்மன் மனைவி மாலதி போன்ற ஜோடிக்குயில்கள், மேடைகளில் தங்களின் குரல் வளத்தால்; தனி சாம்ராஜ்யமே நடத்திக் கொண்டிருந்தனர்.

இவர்கள் போக தனிப்பாடகர்களாக பாடல்களை எழுதியும், இசையமைத்தும் சக்தி சண்முகராஜா (டிஎம்எஸ் வாய்ஸ் பிரதானம்) மற்றும் தோப்பு (வண்ணாரப்பேட்டை) ரஜினி (குமார்) போன்றோர் தனி கெத்து காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தனர். இவர்களில் ரஜினி, ஸ்டீல் பட்டறை ஒன்றில் முழுநேர ஊழியராக இருந்து கொண்டே இரவுகளில் மட்டும் மேடையேறுவார். அழுக்கு உடையோடு ரஜினி மேடையேறினாலும், மேடை அதகளப்படும். பெங்களூரு ரமணியம்மா குரலோ, எஸ்பிபி குரலோ, எம்எஸ்வி குரலோ; இளையராஜா குரலோ; ரசிகன் கேட்பது எதுவோ அதை பேப்பரைப் பார்க்காமலே பாடி மிரட்டுவார். கானா பாடலிலும் மிமிக்ரியிலும் இவரோடு என்னோட மாம்ஸ் – மாப்பிள்ளை மயில்சாமியும் கைகோத்துக் கொள்வார். இருவருமே வள்ளல்கள். தீவிர எம்ஜிஆர் வெறியன்கள். வேறெந்த நடிகரையும் ஏற்கவே மறுக்கிற ஆள்கள். அந்த வகையில் இவர்களோடு அன்பு முட்டல்கள் எப்போதுமே இருக்கும். ‘மயில்’ பறக்கும் வரை 😭 அது இருந்தது. ரஜினியுடன் இப்போது வரை அது தொடர்கிறது.

ராஜேஷ் ரிதம்ஸ் ராஜேஷ் இப்போது இல்லை. சில ஆண்டுகள் முன்னே, வடசென்னை எழில்நகர் – நேதாஜி நகர் வாசிகளுக்கு அது பேரிழப்பாக இருந்தது. டிசிப்ளின் பாடகர் என்ற பெயர், ராஜேசுக்கு உண்டு. ராஜேஷ் மேடையில் என்னை ஏற்றி பாட வைத்திருக்கிறார் என்று சொல்வதே ஒரு மேடைப்பாடகனின் பெருமைகளில் ஒன்றாக அப்போது கருதப்பட்டது.

சங்கரின் சாதகப்பறவைகள் குழுவும் அதே காலகட்டத்தில் சென்னையை இசையால் கட்டிப் போட்டிருந்தது. குழுவினர், பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ளனர்.

கல்யாண வீடுகளிலும், கோயில் விழாக்களிலும், குடும்ப நிகழ்வுகளிலும், அடக்கமாய் அமர்ந்திருக்கும் கருப்புப்பெட்டிகளில்; லஷ்மன், ராஜேஷ், கருணாஸ், மயில்சாமி, கோபால்சர்மா, பாலாஜி- சீலிமா, சுகுமார் -ஈநாக், சக்தி சண்முகம், ரஜினி முகங்களை இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ந.பா.சேதுராமன்

Exit mobile version