Madras Kural

மாணவர்களோடு முதலமைச்சர்!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ எனும் கற்றல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (13.06.2022) தொடங்கி வைத்தார். எட்டு வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதி, படிப்பதை உறுதி செய்யும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 2025- ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் நோக்கமாகும்.

இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் ஒரு வகுப்பறையில் மாணவர்களுடன் ‘பெஞ்ச்’ சில் ஒன்றாக அமர்ந்து, ‘கற்றல் திறன்முறை’ குறித்து ஆய்வு செய்தார். பின்னர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, பள்ளியில் மாணவர்களுக்கு சமைத்து வழங்கப்படும் உணவையும், உணவு கூடத்தையும் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப் பெற்றிருக்கும் ‘எண்ணும் – எழுத்தும்’ கல்விப் பயணம், மாநிலத்தின் அனைத்து மாவட்ட மாணவ சமுதாயத்துக்குமான முதல் விதை என்றே கொள்ளலாம்! ந.பா.சேதுராமன்

Exit mobile version