கந்துவட்டி கொடுமையால் ஏற்பட்ட பாதிப்பை சமூக வலைதளங்களில் காணொளி காட்சியாக (வீடியோ) வெளியிட்டு, மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தம்பதி, ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து கணவன்- மனைவி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(48). தொழில்முனைவர். மகிழுந்து (கார்) உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் முனுசாமி (எ) ராஜா (45) என்பவரிடம் பிரகாஷ், ரூபாய் ஒரு லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. லட்ச ரூபாய்க்கு வட்டியாக மாதம் பத்தாயிரம் ரூபாயை பிரகாஷ் செலுத்தி வந்துள்ளார். இதனிடையே கொரோனா பேரிடர் தொடர்ச்சியாக தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு, முனுசாமிக்கு வட்டி கட்டுவதில் ராஜா தாமதம் செய்து வந்துள்ளார். வட்டிப் பணம் தாமதமானதால் ஆத்திரம் அடைந்த கந்துவட்டி முனுசாமி (எ) ராஜா, கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாக சேர்த்து உடனடியாக வழங்க, நிர்ப்பந்தம் செய்ததோடு ஆட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முனுசாமியின் செயலால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ் பலரிடம் பணம் கேட்டு கிடைக்காததால் விரக்தியில் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார். காணொளி மூலம் (வீடியோ) தனது நண்பருக்கு தகவல் தெரிவித்தும், கைப்பட கடிதமும் எழுதி வைத்துவிட்டு, ஏளாவூர் சோதனைச்சாவடி அருகே (காரில்) மகிழுந்தில் தனது மனைவி சரிதாவுடன் விஷம் குடித்தார். அந்தப் பக்கமாகச் சென்றவர்கள், மயங்கிக் கிடந்த இருவரையும் காப்பாற்றி, ஆம்புலன்ஸ் உதவியுடன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தம்பதியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இருவரும் இறந்து போயினர். சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை முயற்சிக்கு முன்னர் பிரகாஷ் பேசிய வீடியோவில் சென்னை திருவொற்றியூர் மற்றும் தண்டையார் பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள ரவுடிகள், தொலைபேசியில் கொலை மிரட்டல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் அதுகுறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று இரவு பிரகாஷ் இன்று அதிகாலை அவரது மனைவி சரிதா என இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,, சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கந்துவட்டி கும்பலை தேடி வருகின்றனர். கந்து வட்டிக் கொடுமையால் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக உறவினர்களால் கைவிடப்பட்ட தங்களது உடலை எளிய முறையில் நல்லடக்கம் செய்யுமாறு நண்பருக்கு வேண்டுகோள் விடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கணவன் மனைவி தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி கும்பலை கைது செய்ய கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சமாதானம் செய்ய வந்த காவல் அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
P.K.M.