Madras Kural

அண்டா கா கசம், அபூ கா கசம் பொன்னேரி சாக்கடை திட்டம், எப்ப முடியும் சீசே… ?

தமிழ்சினிமாப்பட ரசிகர்களால் 65 ஆண்டுகளாக கொண்டாடப்படும் சினிமா அலிபாபாவும் 40 திருடர்களும் என்றால் அது மிகையல்ல !
அதிலும் அந்தப் படத்தில் இடம்பெறும் அண்டா கா கசம், அபூ கா கசம் திறந்திடு சீசே… என்கிற அந்த வசனம் எந்நாளும் கொண்டாடப்படும் வசனக் காட்சியாகவே இருக்கிறது.
இதை ஏன் இப்போது சொல்லவேண்டி வருகிறது. காரணம் இருக்கிறது !

திரைப்பட இயக்குனர் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், எம். ஜி. ராமச்சந்திரன், பி. பானுமதி, ‘டணால்’ கே.ஏ. தங்கவேலு நடித்த இந்தத் திரைப்படத்திற்கும் பொன்னேரி நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், கிட்டத்தட்ட இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்ன என்பதை புரிந்து கொள்ள முதலில் அலிபாபாவும் 40 திருடர்கள் திரைப்படத்தின்
கதை சுருக்கத்தை பார்ப்போம்.


அமீர் காசிம் கான் என்ற அரசனிடம் அகப்பட்டிருக்கும் பாக்தாத் நடன அழகி
மார்சியானாயை (பானுமதி) காப்பாற்றுகிறான் மரவெட்டி அலிபாபா (எம்.ஜி.ஆர்). அலிபாபா வீட்டில் அடைக்கலம் புகும் மார்சியானா, அலிபாபாவை விரும்புகிறாள். ஒரு நாள், மரம் வெட்ட அலிபாபா செல்லும் பொழுது, கொள்ளையன் அபு ஹுசைனின் புதையல்கள் நிறைந்த ரகசிய குகையை பார்த்துவிடுகிறான். அபு ஹுசைன் பயன்படுத்தும்‌ –
அண்டா கா கசம்’ அபூ கா கசம் – திறந்திடு சீசே’ என்று அவனது அந்தக் காலத்து குகை திறப்பு (பாஸ்வேர்டு)
கடவுச் சொல்லையும் அபு ஹூசைன் பயன்படுத்துவதையும் கேட்டு விடுகிறான் அலிபாபா.

கொள்ளையர்கள் சென்ற பின்னர், அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி, கொள்ளையர்களின்
செல்வத்திலிருந்து சிறிதளவை எடுத்துச் சென்று ஏழைகளுக்கு உதவுகிறான் அலிபாபா.
ஓர் இரவுப் பொழுதில், அலிபாபாவும் மார்சியானாவும் செல்வந்தர்கள் ஆகின்றனர். அதில் பொறாமை கொண்ட அலிபாபாவின் அண்ணன் காசிம் (எம். ஜி. சக்கரபாணி),
அலிபாபாவின் திடீர் ரகசிய செல்வத்தை பற்றி தெரிந்து கொள்ள சலீமாவின் உதவியுடன் முயற்சி செய்கிறான். அதன்படி ரகசியத்தை தெரிந்து கொண்ட காசிம், அலிபாபாவை கொல்ல
முயல்கிறான். சாதுர்யமாக மார்சியானா உதவி செய்ய, சண்டையிட்டு தப்பிக்கிறான் அலிபாபா.

பின்னர், பேராசை கொண்ட காசிம், அபு ஹுசைனின் ரகசிய குகைக்கு செல்கிறான். தங்கத்தையும் வைரத்தையும் மொத்தமாய் அதிகம் பார்த்த அதிர்ச்சியில் கடவுச்சொல்லை
மறந்து குகைக்குள் அகப்பட்டு அபு ஹீசைனின் கையால் கொல்லப் படுகிறான் காசிம். மீண்டும் அலிபாபா குகைக்கு வந்து தன் அண்ணன் இறந்ததைக் கண்டு அதிர்ந்து போய்,
சடலத்தை அப்புறப்படுத்துகிறான். காசிமின் மரணத்திற்கு பிறகு, பாக்தாத்தின் புதிய அரசனாகிறான் அலிபாபா.


அந்நிலையில், கொள்ளையன் அபு ஹுசைன் குகைக்கு திரும்பி வர, காசிமின் சடலம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போகிறான். அந்த சடலத்தை எடுத்தவனை
அபுஹூசைன் உதவியாளர்களான கொள்ளையர்கள் தேடத்துவங்கினர்.

செருப்பு தைக்கும் குலாம் (‘டணால்’ கே.ஏ. தங்கவேலு) மூலமாக, அலிபாபாதான் அந்த மர்ம நபர் என்று தெரிய வந்ததும், குலாமை கொள்கிறான் அபு ஹீசைன்.
அலிபாபாவை கொல்ல திட்டம் தீட்டி தனது சக கொள்ளையர்களை எண்ணெய் பீப்பாயில் ஒளியச்செய்து, வியாபாரி போல் வேடம் அணிந்து வருகிறான் அபு ஹீசைன்.
அவனது அந்த சதி திட்டத்தை அலிபாபாவும் மார்சியானாவும் எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதே திரைப்படத்தின் மீதிக் கதையாகும்.

இப்போது நடைமுறை கதைக்கு வருவோம் !
அது போன்று தான் பொன்னேரி முதல் நிலை பேரூராட்சியாக இருந்தபோது, 2013 ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 54 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை
திட்டத்திற்கான திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான கட்டுமான பணியினை மூன்று ஆண்டில், அதாவது 2016 ஆம் ஆண்டு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தனியார்
கட்டுமான நிறுவனம் அதற்கான பணிகளை தொடங்கியது-இடையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை காரணம் காட்டி அந்த நிறுவனம் பணிகளை பாதியில் நிறுத்தியது. அதன்பின் திட்ட மதிப்பு 74 கோடியே 75 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு, அதாவது 20 கோடியே
35 லட்ச ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டும், பேரூராட்சியாக இருந்த பொன்னேரி நகராட்சியாக
தரம் உயர்த்தப்பட்டும் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள தருவாயிலும், 10, ஆண்டுகள்
ஆகியும் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன, நகராட்சியில் உள்ள
27 வார்டுகளிலும் ராட்சத கழிவுநீர் தொட்டி புதைப்பதற்காக ஜேசிபி எந்திரம் மூலம் சாலையின்
நடுவே பள்ளங்கள் தோண்டுவதும் பின்னர் அதை மூடுவதும், மீண்டும் மூடிய பள்ளத்தை தோண்டுவதும்
தொடர்கதையாகி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் போக்குவரத்துக்கு பயனற்ற வகையில்
குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு, பல பேர் அபாய சாலையை கடக்கும் பொழுது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து கால் கைகளை உடைத்துக் கொள்ளும் நிகழ்வுகளும் அடிக்கடி அரங்கேறி வருகிறது, சில தினங்களுக்கு முன்பு செய்த மழையில் சாலைகள் முழுவதும் சேரும் சகதியுமாக மாறி இரட்டை மாட்டை கட்டி ஏர் உழுதது போன்று மூன்று போகம் விளையும் விளைநிலம் போல் காட்சி அளிப்பதால், சாலையில் உள்ள குண்டு குழிகளில்
தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய் தொற்றுகளை பரப்ப படையெடுத்து வருகின்றன.


இது ஒரு புறம் இருக்க ஜேசிபி இயந்திர பயன்பாட்டின் போது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்த வகையில் மட்டும், நகராட்சி நிர்வாகத்திற்கு 12 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,
”கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டமானது, முன் அனுபவம் இல்லாத
கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டதாலும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு அவ்வப்போது வழங்க வேண்டிய காசோலையை அரசு தரப்பில் விடுவிக்காததும் இதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம் எனவும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் முந்தைய நிலையே தொடர்வதாகவும்” தெரிவித்தார், இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது
“பாதாள சாக்கடை திட்டத்திற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, முழுக்க முழுக்க இத்திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே தனது நேரடி பார்வையில் செய்து
வருகிறது. திட்ட தாமதத்திற்காக சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் இருந்து தண்டம்
வசூலிக்கிறோம்” என கூறி தங்களது கடமையை கை கழுவி விடுகின்றனர்.
குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளோ, எந்த உருப்படியான பதிலையும்
நமக்கு சொல்ல முன்வரவில்லை. இப்போது புரிகிறதா ?

அலிபாபாவும் 40 திருடர்கள் கதையில் வரும் பேராசை பிடித்த காசிம், மந்திரச் சொல்லை பயன்படுத்தி மர்ம குகைக்குள் எப்படி சென்று விட்டு
அங்கு கொட்டிக் கிடக்கும் வைரம், வைடூரியம், தங்க ஆபரணங்களை அள்ளி மூட்டையாக கட்டிக்
கொண்டு சந்தோஷத்தில் மந்திர சொல்லை மறந்துவிட்டு எப்படி குகைக்குள்ளேயே மாட்டிக்கொண்டு,
வெளியில் வர முடியாமல் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் அபு ஹீசைனிடம் சிக்கிக் கொல்லப்படுகிறானோ அதேபோல பாதாள சாக்கடை திட்டத்தில் சிக்கிக் கொண்டது பொறுப்பற்ற அதிகாரிகளோ,
அல்லது அதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமோ அல்ல; அப்பாவி பொதுமக்கள் தான் ! அதனால்தான் என்னவோ, அவர்களின் உதடுகளும் நாள்தோறும் ‌அண்டா கா கசம், அபூ கா கசம் – பாதாள சாக்கடை திட்டப் பணிகள் எப்ப முடியும் சீசே’ என திறக்காத குகையை திறக்க
உச்சரி (முயற்சி) க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொன். கோ. முத்து

Exit mobile version