சற்றேறக்குறைய ரூபாய் 12 கோடி மதிப்புள்ள சோழர் காலத்து தொன்மை வாய்ந்த மூன்று உலோக சுவாமி சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
தமிழ்நாடு சிலை திருட்டு – கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், நம்பகமான தகவலின் பேரில், புதுச்சேரி (புதுவை – பாண்டிச்சேரி) யில் ஒரு வீட்டில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில், தொன்மையான கோவில் சிலைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கியுள்ளது உறுதியானது. தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு இயக்குனர் முனைவர். கி.ஜெயந்த் முரளி உத்தரவில், போலீஸ் ஐ.ஜி. முனைவர். இரா, தினகரன் மேற்பார்வையில் சிலைகளை பத்திரமாய் மீட்க டீம் அமைக்கப்பட்டது. கூடுதல் துணை கமிஷனர் பி. அசோக் நடராஜன் தலைமையில் டிஎஸ்பிக்கள் மோகன், முத்துராஜா, இன்ஸ்பெக்டர்கள் வசந்தி, அம்மு ஆகியோரை உள்ளடக்கிய அந்த டீம் களத்தில் இறங்கியது. சந்தேக வளையத்தில் இருந்த ஜோசப் கொலம்பானி என்பவர், விசாரணை வளையத்துள் கொண்டு வரப்பட்டார். நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு உலோக சிலைகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் ஜோசப் கொலம்பானி வைத்திருந்தது உறுதியானது. மூன்று சிலைகளும், தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் இருந்து 1980-ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக களவாடப்பட்ட சிலைகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சாட்சிகள் முன்னிலையில் மூன்று சிலைகளும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. தொன்மை வாய்ந்த இந்த சிலைகள், சோழர்கள் (ம) விஜய நகரப் பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை, 600 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என கருதப் படுகிறது.
இந்த சிலைகளை எங்கிருந்து ஜோசப் கொலம்பானி பெற்றார், யார் மூலம் எப்போது கிடைக்கப் பெற்றது, போன்ற எவ்வித தரவுகளோ ஆவணங்களோ, அவரிடம் இல்லை. இந்த சிலைகளை பிரான்ஸ் நாட்டிற்கு ஒருமுறை கடத்த முயற்சி நடந்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொன்மையான இந்தச் சிலைகள் எந்தக் கோவிலைச் சேர்ந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட சிலைகள் தொன்மையானது என்று தொல்லியல் துறையினரால் சான்று பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் இந்த சிறப்பான செயலினை தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. முனைவர் சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார். நாமும் பாராட்டுவோமே…
– ந.பா.சே –