Madras Kural

மாணவர்களின் எதிர்காலம்!

காதலில் உள்குத்து ஏற்பட்டு அதன் எதிரொலியாக பலத்த அடி உதை குத்துகளுக்கு ஆளாகியிருக்கிறார் ஒரு மாணவர். சென்னை அடையாறு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள், போனவாரம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், அடையாறில் இருக்கும் ஒரு தனியார் கலைக் கல்லூரி மாணவரோடு மோதலில் ஈடுபட்டிருக்கிறார். சோழிங்கநல்லூர் மாணவருக்கு, அதே பகுதி கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி, காதலி. அந்தக் காதலியிடம் போய், அடையாறு மாணவர், “உன் காதலன், அவ்வளவு நல்லவன் அல்ல” என்று சொல்லி வைத்திருக்கிறார். காதல் முறிந்திருக்கிறது. காதல் முறிய காரணமான, அடையாறு மாணவரை வஞ்சம் தீர்க்க, அண்ணன், அண்ணனின் நட்புகளின் உதவியை கேட்டிருக்கிறார், சோழிங்கநல்லூர் மாணவர். ஒரு நல்ல (?) நாள் குறித்து, அந்த நாளில், அடையாறு மாணவருக்கு போனைப்போட்டு வரவழைத்துள்ளது சோழிங்கநல்லூர் டீம். ஆள் வந்ததும், கும்பல் சேர்ந்து அடித்து துவம்சம் செய்துள்ளனர. இந்த புகார் மனுவை போலீசார் எப்படி விசாரித்திருப்பார்கள் ?
இரு தரப்பையும் கூப்பிட்டு விசாரித்து அல்லது எச்சரித்து, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி எழுதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். அல்லது அடிபட்ட மாணவனுக்கு ஏதாவது உள்காயம், வெளிகாயம் இருந்தால் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருப்பார்கள். வழக்கு விசாரணை கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம், இரு தரப்பும் கோர்ட்டுக்கு வரவேண்டும், இரு தரப்பு பெற்றோர்களும், உறவுகளும் கூட அப்போது வரக்கூடும்… மொத்தத்தில் நீண்ட கால பகைமைக்கு ஏதோ ஒருவகையில் இந்த விவகாரமே அடித்தளம் போட்டுக் கொடுத்துள்ளது என்றுதான் இதைப் பார்க்க வேண்டும்.
இன்னொரு நிகழ்வு, வடசென்னை புதுவண்ணாரப் பேட்டையில் நடந்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேரை கல்லூரி முதல்வர் 10 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்துள்ளார், அதன் பின்னணிதான் வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.
ஒரே கல்லூரியில் பயிலும் சக மாணவிகளுக்குள் தகராறு. பேருந்து நிறுத்தத்தில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் தாக்குதல் சமூக வலைதளங்களிலும், காட்சி ஊடகங்களிலும் செய்தி ஆனது.
மோதலில் ஈடுபட்ட ஒன்பது மாணவிகளின் பெற்றோர்களையும் கல்லூரிக்கு வரவழைத்து முதலில் விசாரணை செய்யப் பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர், பொருளியல் பயிலும் ஆறு மாணவிகள், நிர்வாகவியல் பயிலும் ஒரு மாணவி, இளங்கலை தமிழ் பயிலும் இரண்டு மாணவிகள் என ஒன்பது மாணவிகள், 10 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுமானப் பணியை முடிக்க வேண்டியவர்கள், ஆலைகளை, விவசாய நிலங்களைக் காப்பாற்றக் கூடியவர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் இன்னபிற கலைஞர்கள்; இந்த மாணவ சமுதாயத்தில் இருந்துதான் உருவாகிறார்கள் – அவர்கள் தவறானவர்களாக உருவாகிடக் கூடாது என்பதே நல்லுள்ளம் கொண்டோரின் ஏக்கமாக இருக்கிறது.
உளவியல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது…
படித்து முடித்துவிட்டு பட்டத்தோடு வெளியில் வந்தால் வாழ்வாதாரத்தை சீர்செய்து தரக்கூடிய அளவுக்கு வேலை வாய்ப்புகள் எங்கும் இல்லை என்பதும், வாய்ப்புகளை தேடி ஓடக்கூடிய அளவுக்கு மாணவர்களின் கால்கள், அத்தனை பலம் வாய்ந்ததாக இல்லை என்பதும் வீடுதோறும் கதவைத் தட்டிச் சொல்லிப்போக வேண்டிய இன்னொரு முக்கிய செய்தியாக இருக்கிறது…
எதிர்காலம் அத்தனை சிறப்பாய் வடிவமைக்கப் பட்டிருக்கவில்லை மாணவர்களே.. அதையாவது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் !
ந.பா.சேதுராமன்

Exit mobile version