Madras Kural

கூடுதல் துணை கமிஷனரின் நெகிழ வைக்கும் பெருந்தன்மை ! – சென்னை அப்டேட்…

(1) சென்னை அயோத்தியா நகர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் மணி. மீன்பிடி தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டின் எதிரே லேடி வெலிங்டன் பள்ளியின் காம்பவுண்டு சுவர் பக்கம் இருந்த முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க முயன்றுள்ளார். இரும்பு தொரட்டி கம்பி மூலம் முருங்கைக்காய் பறித்த போது அங்கிருந்த டிரான்ஸ் பார்மரில் தொரட்டி கம்பி பட்டு மணியை மின்சாரம் தாக்கியது. அதில் தூக்கி வீசப்பட்ட மணியை, அவருடைய மகன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மெரீனா போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். (2) சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரும், தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை போலீசாரும் தகவலின் பேரில் ரயில் பெட்டிகளில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் ஒரு பகுதியாக மாதவரம் பகுதியைச் சேர்ந்த ரயில் பயணி எபினேசர், கைப்பையை சோதனையிட்ட போது அதில் 2கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. எபினேசரிடம், மத்திய போதைப் பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். (3) சென்னை கொளத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்த சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான். இந்த சம்பவத்தில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தில், சிறுவன் குகன் (3) ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார், குழந்தை எப்படி விழுந்தது ஏதாவது சதி வேலை உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (4) வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டை குத்தகைக்கு விட்டு ஏமாற்றிய ஆசாமிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் கங்கா நகர் (மெயின்) பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தலைமைச் செயலக காலனி, நம்மாள்வார் பேட்டையில் 14 வீடுகள் சொந்தமாக உள்ளது. அந்த வீடுகளில் வாடகைக்கு இருந்த சங்கர், சர்மிளா, மல்லிகா ஆகியோர் வாடகை பணத்தை வாங்கி தன்னிடம் கொடுத்து வந்ததாகவும், கடந்த மூன்று மாதங்களாக வாடகை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீஸ் ஸ்டேசனில் வீட்டின் உரிமையாளர் புகார் அளித்தார். புகாரின் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வீடுகளை குத்தகைக்கு விட்ட மூவரையும் கைது செய்தனர். (5) சென்னை வண்ணாரப் பேட்டையில் ரோந்துப் பணியில் இருந்த போலீசாரிடம் திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகராறு செய்து மிரட்டல் விடுத்த சம்பவம் வீடியோ வடிவில் பரவியது. திமுக தலைமை, ஜெகதீசனை கட்சியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டது. போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை மிரட்டியதாக ஜெகதீசனின் கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதில் தேடப்பட்டு வந்த அறிவழகன், சதீஷ் ஆகிய இருவரும் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர்.
(6) திமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த ஐவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் ஏப்ரல் 3ம் தேதி திமுக பிரமுகரான கரும்பு ஜூஸ் சவுந்தர்ராஜன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் அதிமுக பிரமுகர்களான கணேசன், தினேஷ், கார்த்தி, குமரேசன், இன்பா ஆகிய ஐவர் செங்கல்பட்டு கோர்ட்டில் 4ம் தேதி சரணடைந்தனர்.
இவர்கள் ஐவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசார், கோர்ட்டில் அனுமதி கேட்டிருந்தனர். ஜார்ஜ் டவுன் கோர்ட், போலீசாருக்கு இன்று அனுமதி வழங்கியது.
இதையடுத்து ஐவரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். ஐவரிடமும் எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (7) சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமாரின் பெருந்தன்மையை போலீசார் மிகுதியாகவே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சென்னை தி.நகர் காவல் மாவட்ட எல்லையில் கூடுதல் துணை கமிஷனர் சரவணக் குமார், ரோந்துப் பணியில் இருந்த போது, எதிர்திசை (ஒன் வே)யில் வந்த ஆட்டோ ஒன்று போலீஸ் பொலிரோ ஜீப் மீது மோதியது. ஆட்டோவை ஓட்டி வந்த வாலிபர் அஜித்தை போலீஸ் வாகன ஓட்டுநரான காவலர் கவியரசன் பிடித்து மாம்பலம் போலீசில் ஒப்படைத்தார். “போலீசின் பொலிரோ வாகனத்தின் வலதுபக்கம் இடித்ததில், வலதுபுற கண்ணாடி மற்றும் முன்பக்க பம்பர் உடைப்பை மட்டும் ஆட்டோ டிரைவர் அஜீத் சரி செய்து கொடுத்தால் போதும், வழக்கோ மேல் நடவடிக்கையோ தேவையில்லை” என்று கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார், அப்போது பெருந்தன்மையோடு தெரிவித்துள்ளார். ஆட்டோ டிரைவர் அஜீத்தும், சரி என்று ஒப்புக் கொண்டுள்ளார்… நல்ல மனங்கள் வாழ்க!
(8)அரசால் தடை செய்யப்பட்ட 334 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் குட்காவை வைத்திருந்த மூவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் ஜலீல் முகைதீன், கர்நாடகத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தபாரகுல்லா ஆகிய மூவரை தகவலின் பேரில் போலீசார், அரும்பாக்கம் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். கர்நாடகா பதிவெண் கொண்ட இன்னோவா கார், ஹோண்டா ஆக்டிவா மோட்டார் சைக்கிள் மற்றும் 334 கிலோ எடையுள்ள ஹன்ஸ், கூலிஃப், ரெமோ ஆகிய குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 7,200 ரூபாய் ரொக்கம் அப்போது கைப்பற்றப் பட்டது. அரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். (9)விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய கல்லூரி மாணவரிடம் விசாரணை நடக்கிறது. சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன். சுய தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ளார். அதே கல்லூரியில், எம்.எஸ். படித்து வரும் தசரத்ராம் ரெட்டி என்ற மாணவர் ஒருதலையாக, சங்கர்ராமன் மகளை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சங்கர்ராமன் வீட்டிற்கு மதுபோதையில் போன தசரத்ராம் ரெட்டி, சங்கர்ராமன் மகளிடம் பேச வேண்டும் என்று சொல்லி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. காவல் கட்டுப்பாட்டறைக்கு இது குறித்து சங்கர்ராமன் தகவல் கொடுக்கவே, போலீசார் அங்கு விரைந்தனர். முதல்நிலைக் காவலர் ராஜா, போலீஸ் ஜிப்ஸி ஓட்டுநரான கான்ஸ்டபிள் மோகன், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தசரத்ராமரெட்டி, போலீஸ் ராஜாவின் கன்னத்தில் அறை விட்டிருக்கிறார். இதுகுறித்து ராஜா புகார் அளிக்கவே, சப். இன்ஸ்பெக்டர் பிரபு, சம்பவ இடத்துக்கு சென்று தசரத்ராம் ரெட்டியை பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.
(10) சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஆன்லைன் எடிட்டராக பணிபுரிந்து வந்தவர், சிவமுருகன். சென்னை வளசரவாக்கம், விசாலாட்சி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவமுருகன், வீட்டிலேயே மின் விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். உடனடியாக சிவமுருகனை ஆட்டோ மூலம் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு, அருகிலிருந்தோர் அழைத்துச் சென்றனர். அப்போது சிவமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட மன உளைச்சலால் சிவமுருகன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வளசரவாக்கம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

(- ந.பா.சே – )

Exit mobile version