Madras Kural

கஞ்சாவுடன் ஆந்திரா டூ சென்னை வந்த தம்பதி!

சென்னை மண்ணடி, பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் முகமது நௌஷாத் அலி. ராயபுரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 17 ம் தேதி ஆந்திரா அடுத்த விசாகப்பட்டினம் அருகிலுள்ள துளி என்னும் இடத்திற்கு 3-வது மனைவி ஆயிஷா என்பவருடன் சென்று அந்தப் பகுதியில் 30 கிலோ கஞ்சா வாங்கியதாக தெரிகிறது. 21 ம் தேதி மாலை அங்கிருந்து புறப்பட்டு காரில், தம்பதியர் கஞ்சாவோடு சென்னை வருவதாக கிடைத்த தகவலின் பேரில் யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் மற்றும் போலீஸார், திருவள்ளுர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே அவர்களைப் பிடிக்கக் காத்திருந்தனர். அதே வேளையில், எளாவூர் சோதனைச்சாவடி அருகே திருவள்ளூர் மாவட்ட போலீசாரின் வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது. வாகன சோதனையை பார்த்ததும் ஸ்விப்ட் காரில் வந்து கொண்டிருந்த நௌஷாத் அலி, அங்கிருந்து லாகவமாக காருடன் தப்பித்துச் சென்று அருகேயுள்ள கிராமத்து வயல் வெளியில், மனைவியுடன் பதுங்கி விட்டார். யானைகவுனி போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றும் சைபர் க்ரைம் பிரிவு காவலர் மதன்குமார் உதவியைப் பெற்று, முகமது நௌஷாத் அலியின் லொகேஷன் டவரை யானைகவுனி போலீசார் வாங்கினர். நள்ளிரவு தொடங்கி, விடியும் வரை வயல்வெளியில் பதுங்கிப் பதுங்கி ஆட்டங்காட்டிய முகம்மது நௌஷாத்அலி, முதலம்பேடு காலனி என்ற கிராமத்தில் வைத்து அதிகாலை சிக்கிக் கொண்டார். அவர் மனைவி ஆயிஷாவும் சிக்கிக் கொண்டார். காரும் முப்பதுகிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது.

– விகடகவி எஸ். கந்தசாமி

Exit mobile version