திருவள்ளூர் மாவட்ட பெரியபாளையம் கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க ஒப்பந்ததாரர்கள் தடை விதித்ததால், பாதிக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள்; சாமி தரிசனம் செய்ய வந்த அறநிலையத் துறை மந்திரி சேகர்பாபுவின் மகிழுந்தை (கார்) சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்றது அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவில். ஆடி மாதம் 14 -ஆம் வார சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காணிக்கை முடி வெட்டுவதற்கான ஒப்பந்ததாரர்கள், ஏற்கனவே பல ஆண்டுகளாக அங்கு காணிக்கை முடி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுக்கு தற்போது காணிக்கை முடிஎடுக்க தடை விதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆடி முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரியபாளையம் பவானி அம்மனை தரிசிக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி .கே. சேகர்பாபு குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தார். பின்னர் தரிசனம் முடிந்து அவர் புறப்பட்டு செல்லும் பொழுது, பக்தர்களுக்கு மொட்டை அடிக்க ஒப்பந்ததாரர்கள் விதித்த தடையால் வாழ்வாதாரத்தை இழந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் அமைச்சர் சேகர்பாபுவின் மகிழுந்தை (கார்) தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். காணிக்கை முடியை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்துவிட்டு அத்தொழிலையே நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்க அரசே நேரடியாக காணிக்கை முடியை எடுக்கும் பணியை மேற்கொண்டு தங்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முடி திருத்தும் தொழிலாளர்களை அங்கிருந்து அப்புற படுத்திய பின்னரே அமைச்சரின் மகிழுந்து (கார்) அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
P.K.M