Madras Kural

செந்தில் பாலாஜி நிம்மதியை கெடுக்காதீர்…

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 16.05.2023 காலை வரை
1558-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை வாசித்தது முதல்
விழுப்புரம் சாராயச் சாவுகளை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.

மதுவிலக்கு (மற்றும் மின்சாரத்துறை) மந்திரி செந்தில்பாலாஜிக்கு எதிராக
நடந்துள்ள மிகப்பெரிய சதி திட்டமாகவே இதை என்னால் பார்க்க முடிகிறது. வாரத்துக்கு மாதத்துக்கு ஆண்டுக்கு என தனித்தனி ‘டார்கெட்’ வைத்து மது விற்பனையை சிறப்பாக்கி அந்த வருமானத்தின் மூலம் நாட்டையும்
செழிப்பாக மாற்றுகிறவரின் புனிதப் பயணத்துக்கு ஒரு இடையூறு என்றால் நிச்சயம் அதை ஏற்க முடியாது.

பேருந்துகளில் வடமாவட்டங்கள் வழியாக பயணிக்கும் போதெல்லாம்
எனக்குள் சற்று உறுத்தல் இருந்ததை இப்போது – இந்த சம்பவத்தோடு
பொருத்திப்பார்க்கத் தோணுகிறது. ஆம், மக்களே… வழியில் தென்படும்
‘ஃபார்’ களில் சமீப காலங்களில் கூட்டமே இருந்தது கிடையாது.

மேலே விழுவது போல் வந்து விழுந்து
சாலையோர வரப்புகளில் உருளும் ஆசாமிகளை காண முடியவில்லை.
வெகுவிரைவில் உச்சம் தொடும் பாக்கியம் கிடைத்து விடுவதால் அதுவும் குறைந்த விலையில் என்ற நிலையில் -அப்படிப்பட்ட ஆட்களின்
நடமாட்டமே மாவட்ட எல்லை நெடுக எங்கும் இல்லை.

டாஸ்மாக் வருமானம் இல்லை, ஃபார்களில் கூட்டம் இல்லை, மொத்தத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகாவுக்கு வருமானமே இல்லை. சொல்லப்போனால் அமைச்சர் செந்தில்பாலாஜிதான் இதில் நஷ்ட ஈடு பெறுவதற்கான அனைத்துத் தகுதியும் கொண்டவர். முதலமைச்சருக்கும் மற்றவர்களுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனவேதனை புரியுமா என்று தெரியவில்லை.

இதற்கு முன்னர் கடந்த காலங்களில் எத்தனையோ மந்திரிகள் இந்த துறையை கையில் வைத்திருந்தார்கள், அவர்களில் ஒருவர் பெயராவது இந்த மக்கள் அறிந்திருக்க முடியுமா அல்லது நினைவுக்குத்தான் வருவார்களா ?
அரசு மதுபானத்தை ஏடிஎம்மில் காசு போட்டு விட்டு எடுத்துக் கொண்டு
போகும் அளவுக்கு எளிமைப்படுத்திய ஒருவரை இனி பார்க்கத்தான் முடியுமா ?
விவிவிஐபிகள் வந்து போகக்கூடிய இடங்கள், பெரிய பெரிய மால்கள், வணிக வளாகங்களில் விற்பனையை கொண்டுவர திட்டமிட்டது முதல் திருமண மண்டபங்கள், கேளிக்கை விடுதிகள் வரை மதுவிருந்துக்கு கொடுத்த அனுமதி இன்று வேண்டுமானால் எதோ காரணத்தால் தடை பட்டிருக்கலாம்; வருங்காலத்தில் அது மிக சிறப்பாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்றால், செந்தில்பாலாஜி அவர்களின் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அல்லவா? அதை கெடுத்து
விடாதீர்கள், உள்ளூர் கட்சிக் காரர்களே, அதிகாரிகளே, சாராய வியாபாரிகளே…

ந.பா.சேதுராமன்

Exit mobile version