Madras Kural

ராகு- கேது சேர்க்கையும், வருமானத்துக்கு வழியும்…

(தொடர் பதிவு -9)

தொழில், உத்தியோகம்… பாதிப்பு-பரிகாரம்…


இதுவரையான பதிவுகளில் பரிகாரம் பற்றி அடிப்படை விஷயங்கள் கொடுக்கப்பட்டது. இனி அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளுக்கான எளிய பரிகாரங்கள் தரப்பட உள்ளன.
இன்று பலரும் கேட்கும் கேள்விகளில் முக்கியமானது, தொழில் சம்பந்தப்பட்டதாக உள்ளது. எனக்கு சொந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது, சரிவர வேலை கிடைக்க வில்லை; பதவி உயர்வு கிடைக்க வில்லை; என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்றுதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஒருவரது வாழ்கைக்கு இன்றியமையாதது தொழில் தான். தொழில் என்பது லக்னத்தில் இருந்து 10 வது வீடு அதாவது 10ம் பாவம் தொடர்புடையது. இந்த வீட்டின் அதிபதி கெடாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அத்துடன் அந்த பாவமும் நன்றாக இருக்க வேண்டும். அதாவது பத்தாம் வீட்டின் அல்லது பாவத்தின் அதிபதி, பகை நீச்சம் இல்லாமல் தீய கிரகத்துடன் தொடர்பு இல்லாமல்; மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருக்கவேண்டும். இதே போன்று தொழில் ஸ்தானமாகிய 10-ம் இடத்தில் தீய கிரகங்கள் இல்லாமல் பத்தாம் பாவத்தை தீய கிரகங்கள் பார்க்காமல் மற்றும் பத்தாம் பாவத்துடன் தீய கிரகங்கள் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி பத்தாம் பாவாதிபதியும், பாவமும், கெடாமல் இருந்தால்தான் அந்த ஜாதகர்; சொந்த தொழில் செய்யமுடியும். அத்துடன் விரய ஸ்தானாதிபதி வலு பெறாமல், விரைய ஸ்தானமும் பலப்படாமல் இருப்பதுடன்; தனக்காரகன் குருவும், லாபஸ்தானமான 11 ம் வீடு, அல்லது பாவமும் வலுவாக இருந்தால்தான்; அந்த ஜாதகர் சொந்த தொழில் செய்து லாபம் காணமுடியும்.
சிலர் இந்த அமைப்புகளை சரிவர கணக்கிடாமல், சொந்த தொழில் செய்துவிட்டு லாபம் கிடைக்கவில்லை, கடன் ஏற்பட்டுவிட்டது என்று; புலம்புகிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த ஜாதகர் என்ன பரிகாரம் செய்தால் ஓரளவு மீண்டு வரமுடியும் என்றால், அதற்கு முதலில் அந்த ஜாதகரின் பத்தாம் அதிபதி (கெட்டிருந்தால்); பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறாரா என்பதை கண்டறிய வேண்டும்.
உதாரணமாக பத்தாம் பாவாதிபதி சூரியன் என்று வைத்துக்கொள்வோம்.. சூரியன் இயற்கை அசுபராக இருந்தாலும், ஜனன ஜாதகத்தில் அவர் தொழில் ஸ்தானாதிபதி ஆகிறார். எனவே அவர் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு, தொழிலில் மந்த நிலை ஏற்படும். அப்போது சூரியனுக்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும். அதாவது சூரியன் ஸ்தலமான சூரியனார் கோயிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதுடன்; நவகிரகத்தில் உள்ள சூரியனுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி; தங்கள் சக்திக்கு தகுந்தவாறு சிவப்பு வஸ்திரம் சாற்றி; கோதுமை தானியம் படைத்து (நிவேதனம் செய்து) அதனை ஏழை எளியவருக்கு வழங்க வேண்டும்;(குறைந்தது அரைகிலோ அளவில்)
பத்தாம் பாவாதிபதி சந்திரனாக இருந்து அந்த கிரகம் வலுவிழந்து போயிருந்தால், திங்களூர் சென்று சந்திர பகவானை வழிபடுவதுடன், திங்கள் கிழமைகளில்; நவ கிரகத்தில் சந்திரனுக்கு நெய் தீபம் ஏற்றி, தங்கள் சக்திக்கு ஏற்றவாறு; வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். அத்துடன் முடிந்த அளவு வெண் பொங்கல் செய்து சந்திர பகவானுக்கு நிவேதனம் செய்து அதனை ஏழை எளியவருக்கு வழங்க வேண்டும்.
பத்தாம் பாவாதிபதி செவ்வாயாக இருந்து அந்த கிரகம் வலுவிழந்து போயிருந்தாலோ(கெட்டு இருந்தால்), வைதீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்காரகன், மற்றும் புதனை வழிபட்டு வருவதுடன்; செவ்வாய்க்கிழமைகளில் நவகிரகத்தில் செவ்வாய்க்கு நெய் தீபம் ஏற்றி, முடிந்தால் சிவப்பு வஸ்திரம் சாற்றி, துவரை (அரைகிலோ அளவு) நிவேதனம் செய்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
பத்தாம் பாவாதிபதி புதனாக இருந்து அந்த கிரகம் கெட்டிருந்தால் புதன் ஸ்தலமான திருவெண்காட்டிற்கு சென்று வழிபடுவதுடன், புதன் கிழமைகளில் நவகிரகத்தில் புதன் பகவானுக்கு; முடிந்தால் பட்டு வஸ்திரம் சாற்றி, பாசிப்பருப்பு சுண்டல் நிவேதனம் செய்து வழங்க வேண்டும்.
பத்தாம் பாவாதிபதி குருவாக இருந்து, அந்த கிரகம் பாதிக்கப்பட்டு இருந்தால்; குருஸ்தலமான ஆலங்குடிக்கு சென்று குருவை அர்சித்து வழிபடுவதுடன்; வியாழக்கிழமைகளில் குருவுக்கு முடிந்தால் மஞ்சள் வஸ்திரம் சாற்றி , நெய் தீபம் ஏற்றி வணங்கி; கொண்டக்கடலை சுண்டல் படைத்து வினியோகம் செய்யவேண்டும்.
பத்தாம் பாவாதிபதி சுக்கிரனாக இருந்து அந்த கிரகம் கெட்டு இருந்தால் , கஞ்சனூர் சென்று சுக்கிரனை அபிஷகேம் ஆராதனை செய்து வழிபடுவதுடன்; வெள்ளிக் கிழமைகளில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு; முடிந்தால் வெண்பட்டு வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அத்துடன் மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து வினியோகம் செய்யவேண்டும்.
பத்தாம் பாவாதிபதி சனி பகவானாக இருந்து அந்த கிரகம் வலுவிழந்து இருந்தால் திருநள்ளாறு அல்லது குச்சனூர் சென்று சனி பகவானை அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு முடிந்தால்; கருப்பு வஸ்திரம் சாற்றி எள்சாதம் (முடிந்த அளவு) நிவேதனம் செய்து; ஏழை- எளியவர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். அத்துடன் நல்லெண்ணை தீபம் ஏற்ற வேண்டும்.
ராகு , கேதுக்கள் பத்தாம் பாவாதிபதியுடன் சேர்க்கை பெற்று இருந்தாலும் (அ) அந்த பாவத்துடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அதனால் தொழிலில் வருமானம் பாதிக்கப்படும். அவ்வாறு இருந்தால் பத்தாம் அதிபதிக்கு பரிகாரம் செய்வதுடன் ராகு, கேதுகளில் எதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து; அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்வது நன்மை தரும். அதாவது மாரியம்மனுக்கு அபிஷகம் ஆராதனை செய்வது, வஸ்திரம் சாற்றி வழிபடுவது, பாம்பு புற்றுக்கு பால் வைப்பது, நவகிரகத்தில் ராகு கேதுக்களுக்கு தீபம் ஏற்றி; ராகுவுக்கு கருப்பு நிறத்திலும், கேதுவுக்கு பல நிறங்களிலான வஸ்திரம் சாற்றி, ராகுவுக்கு உரிய உளுந்து, கேதுவுக்கு உரிய கொள்ளு ஆகிய தானியங்களை ராகு, கேதுவுக்கு படைத்து; ஏழை எளியவருக்கு வழங்க வேண்டும்.
இதே போல் குரு பகவான் வலுவிழந்து காணப்பட்டால் மேலே கூறப்பட்ட கிரகங்களுக்கான பரிகாரம் செய்வதுடன் குரு பகவானுக்கும் சேர்த்து பரிகாரம் செய்யவேண்டும். அதே போன்று விரையஸ்தானமான 12-ம் பாவம் மற்றும் அந்த பாவாதிபதி பாதிக்கப்பட்டிருந்தால் அந்த கிரகத்திற்கும் சேர்த்து பரிகாரம் செய்யவேண்டும். சொந்த தொழில் செய்யாமல் வேலைக்கு செல்பவர்கள் தங்கள் பணியில் இடையூறுகள் இருந்தால் மேலே கூறப்பட்ட பரிகாரங்களை செய்யலாம். பதவி உயர்வு வராமல் தாமதம் ஆவதற்கு தசா நாதன், புத்தி நாதன் தொழில் ஸ்தானாதிபதியுடன் தொடர்பு கொண்டு இருப்பதும், மேலும் அந்த கிரகம் சுப பலன் தரும் அமைப்பில் இருந்தால்; பதவி உயர்வு பாதிக்கப்படும். சரியான வேலை கிடைக்காமல் தாமதம் ஆனாலும் தொழில் ஸ்தானாதிபதி மறைவு ஸ்தானங்களில் இருப்பது, பாப கிரகசேர்க்கை, பார்வை பெற்று இருப்பது போன்ற காரணங்கள் இருக்கும்.
இந்த கிரகங்களின் தன்மையை ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் பரிகாரம் செய்ய வேண்டும்.
பரிகாரம் எத்தனை வாரங்கள் செய்ய வேண்டும் என்பதை, அந்த கிரகத்தின் பாதிப்பின் அளவைக்கொண்டு நிர்ணயம் செய்யவேண்டும். மேலும், நடைபெறும் தசா புத்திகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, தசா நாதன்; புத்தி நாதன் மூலம் உண்டாகும் தொழில்; வியாபாரம், வேலை பாதிப்புகள் இருந்தால்; தசாபுத்தி நாதன் என்ன கிரகமோ; அதற்கான பரிகாரம் செய்யவேண்டும்.
இந்த பரிகாரங்கள் ஒரளவு பலன் தரும் என்பதை அனுபவப்பூர்வமாக கண்டறிந்த நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். பரிகாரங்கள் பிறந்த ஜாதகங்களை ஆராய்ந்து, அதில் கிரகங்களின் பாதிப்பை கண்டறிந்து; அதன்படி செய்வது நல்லது. சந்தேகம் இருந்தால் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு செய்வது நன்மை தரும்.

கட்டுரையாளர்: ஜோதிட ரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி.ஸ்ரீனிவாசன்M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-

Exit mobile version