Madras Kural

நீதி கேட்டு வீதிக்கு வந்ததால் தீர்வு… கலாசேத்ரா மாணவியர் குமுறல் புதிதல்ல!

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனம் கலாசேத்ரா, பாலியல் குற்றச்சாட்டுகளால் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்தாலும், கலாசேத்ரா, தமிழ்நாட்டில் ஒட்டி உறவாடியது இல்லை- கலாசேத்ரா என்றாலே அது டெல்லியை நோக்கித்தான் சூரியனையும், நிலவையும் தேடும். அத்தனை திசையும் வடக்கு நோக்கித்தான் கலாசேத்ராவுக்கு மட்டும் அமைந்திருக்கும்.

”கலாசேத்திரா (Kalakshetra) நிறுவனம்,
பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் பொருட்டு, 1936-ல்
ருக்மிணிதேவி அருண்டேலினால் தொடங்கப்பட்டது. ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலக முழுவதும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள்.
அருண்டேலின் வழிகாட்டலே கலாசேத்ராவின் வளர்ச்சிக்கு
முக்கிய காரணி” என்கிறது, விக்கிப்பீடியா முன்னுரை.

இப்போது இயங்கும் கலாசேத்திரா சென்னை திருவான்மியூரில்
1962- ஆம் ஆண்டு தொடங்கியது. தொடக்ககால கலாசேத்ரா, ருக்மிணி தேவி மற்றும் அவர் கணவர் ஜோர்ஜ் அருண்டேல் மூலம், 1936-ல் அடையாறு பிரம்மஞான சபை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1993-ல் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, ‘கலாசேத்திரா’ இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. அன்னி பெசன்ட் அம்மையார், டாக்டர் ஜோர்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ்,
டாக்டர் சி.பி. இராமசுவாமி ஐயர், ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி போன்றோர்
கலாசேத்திராவின் முன்னேற்றத்துக்கு தொடக்ககால உறுதுணையாக இருந்தனர் என்கிறது கலாசேத்ரா வரலாறு !

‘சுய’ முன்னுரை கொடுத்த காலத்தில் ‘அது’ அப்படித்தான் இருந்துள்ளது, பலர் அப்படித்தான் இருந்துள்ளனர். எந்தவொரு அமைப்பும் நிறுவனமும் யார் கட்டுப்பாட்டிலும் நாங்கள் இல்லை
எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று நேரடியாகவோ
மறைமுகமாகவோ உணர்த்துவது போல் வெளித்தோற்றத்தை
உருவாக்கி வைத்துக் கொண்டால், அந்த அமைப்பு கீழே விழும் போது
தாங்கிப்பிடிக்க ஒருவர்கூட பக்கத்தில் நிற்க வாய்ப்பே இல்லை – இது எல்லா நிறுவனத்துக்கும் பொருந்தும்.

இசைக்கலைஞர்கள் டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இசை ஆளுமைகள், கலாசேத்ராவில் பணியாற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.
பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை போன்ற கவின் கலைகளில் நான்காண்டு கல்வியை முடிப்பவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் இங்கே வழங்கப்படுகிறது.
பொதுக் கல்வியும் உண்டு. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில
மொழிகள் சிறப்புப் பாடங்கள்.

இப்படி பெருமையும் கலாச்சாரமும் தன்னகத்தே தேக்கிக் கொண்டு நிற்கும் கலாசேத்ரா மாணவிகள்தான், தங்களுக்கு, ‘பேராசிரியர் மற்றும் பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர்’ என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதறவிட்டுள்ளனர்.
பதறவிடுவது எப்போதுமே பாதிக்கப் பட்டோரின் நோக்கமாக இருப்பது இல்லை. பொதுவாகவே பாதிக்கப்பட்ட அனைவருமே பலகீனர்கள்தான். அப்படிப்பட்ட பலகீனர்கள், ஓரணியில் திரண்டு வெடிக்கும் போது, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’
என்பது போல் அது எதிர்த்தரப்பைப் பதற்றத்தில்தான் ஆழ்த்தும் – பதற்றத்தில் மூழ்க வைக்கும். அதுதான்
கலாசேத்ராவில் நடக்கும் அத்து மீறல்களை அம்பலப்படுத்திய போதும் நடந்தது.

கலாசேத்ராவின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்ட சிலர்மீது
போலீசில் மாணவிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது !
ஆமாம், சொல்லப்பட்டது மட்டும்தான்… ஏனெனில், கலாசேத்ராவைப்
பொறுத்தவரை கடந்த பத்து நாட்களாக நடக்கும் இந்த விசாரணைகளில்
நேற்று- இன்று- நாளை – என அனைத்துமே கடைசி நேரத்தில் மாறிக் கொண்டே போகிறது.

கலாசேத்ராவில் பணியாற்றும் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் என மூவர் மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, உண்மைத் தகவல்களை திரட்ட தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது ஆணைய தலைவி குமரி முன்பாக ஏராளமான மாணவிகள் விரிவாகவே வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.
(ஆம்- இந்த இடத்திலும் தெரிகிறது, புரிகிறது என்றுதான் நம்மால் பதிவு செய்ய முடிகிறது)
சுமார் 15 ஆண்டுகாலமாகவே பல்வேறு அத்துமீறல் சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதாக அங்கு பயிலும்
மாணவிகள் எழுத்துப்பூர்வமாக ஆணைய தலைவி, குமரியிடம்
புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.
பாலியல் ரீதியாகவும், அருவருப்பு பேச்சாகவும், அவமதித்தும், வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தும், உடல்நலம் குன்றிப் போக வைத்தும், மாணவியர் உடல் அங்கங்களை, தோற்றம் மற்றும் நிறங்களைக் குறிப்பிட்டும் -பேசியும், துன்புறுத்தல் செய்தும்… இன்னும் பல வடிவங்களில்
கொடூர மனச்சிதைவு அம்சங்களை எதிர்கொண்டு நின்றதை மாணவியர் பலர், வரிசையில் வந்து கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

’கலாசேத்ரா தலைமை நிர்வாகிகளிடம் பலமுறை இதுகுறித்து தெரிவித்தும், எந்த நடவடிக்கையையும் இதுவரை யாரும் எடுத்தது இல்லை’ என்பதும் மாணவியரின் குற்றச்சாட்டுகளில்
ஒன்று. இதை மட்டும் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால், ஒட்டுமொத்த இருட்டுக்கும் கைவிளக்கு ஒன்று காணக்கிடைக்கும் !

கலாசேத்ராவில் பயின்ற கேரள மாநிலத்தின் முன்னாள் மாணவி அளித்த புகாரில், ’கலாசேத்ராவில் படித்த போது என்னை வீட்டுக்கு அழைத்தும், கல்லூரி வளாகத்தில் வைத்தும் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை’ என்று அழுத்தமாகவே சொல்லி வைத்திருப்பதாக -தெரிகிறது !
ஆம், தெரிகிறது, புரிகிறது, சொல்லப் படுகிறது, கருதப்படுகிறது,
பேசப் படுகிறது, நீண்ட காலத்துக்கு நான் எழுதுவது (ம்) தேவைப்படுகிறது…

தமிழ்நாடு சட்டசபையில், எம்.எல்.ஏ. க்கள் ராமச்சந்திரன்(சிபிஎம்), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), அருள்(பா.ம.க.),வேல்முருகன்(த.வா.க), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), ஆகியோர்
கலாசேத்ரா பிரச்சினையைக் கையில் எடுத்தனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு
நீதி வழங்க வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் கலாசேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை நடைபெறுவதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
”கலாசேத்ரா பவுண்டேஷன் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் பேச்சுக்கு அரசின் விளக்கம் இது. ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய,
கலாசேத்ரா பவுண்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து “பாலியல் தொல்லை” என டுவிட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக, கலாசேத்ரா
பவுண்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல்துறைத் தலைவரை சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே செய்தியின் அடிப்படையில் விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்” என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதி தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து
கலாசேத்ராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடமும் விசாரித்து விட்டுச் சென்று உள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத்தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாசேத்ரா பவுண்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டேன். இந்த விவகாரம் எனது கவனத்திற்கு
கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை
அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும்
விவரங்களை அறிவதற்காக, வருவாய்க்கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை
ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற் கொண்டார்கள். இன்று (31.03.2023) காலையில், மீண்டும் வருவாய்த் துறை
மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள
மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு,
அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு
இருக்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம்
எடுக்கப்படும் என தெரிவித்து அமைகிறேன் – என்று விளக்கம் தந்தார்,
முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்.

கலாசேத்ரா பேராசிரியர் அரிபத்மன், நடன ஆசிரியர்களான சாய் கிருஷ்ணா,
சஞ்சித்லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதன்பின்னே, மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையங்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைக்கு
பரிந்துரை செய்த நிலையிலும், ’புகாருக்குள்ளான நபர்கள் அனைவரும் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்’ என்றும் பாதிக்கப்பட்ட மாணவியர் குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் நீள்கிறது.
அதாவது சொல்லப்படுகிறது, பேசப்படுகிறது, கூறப்படுகிறது, கட்டுரையாளரால் கருதவும் படுகிறது…

கலாசேத்ரா கல்லூரி வளாகத்திலேயே மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
நடத்தியதால் போராட்டம் தீவிரமாக, ஏப்ரல் 6-ந் தேதி வரை கலாசேத்ராவுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாணவிகள் யாரும், தாமாக முன்வந்து போலீசில் புகார் அளிக்காமல் கொஞ்சம் தயக்கம் காட்டினர். இந்நிலையில்தான்
கேரள முன்னாள் மாணவி போலீசில் துணிச்சலாக சென்று புகார் அளித்தார்.
அதில்தான் பேராசிரியர் அரிபத்மன் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியது தொடர்பாக
பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தனது தோழியுடன் போன மாணவி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸ் நடவடிக்கை தீவிரமானது.
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட, தெற்கு போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா, அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்தி
வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி,
பேராசிரியர் அரிபத்மன் மீது 509 ஐ.பி.சி., 354-ஏ மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் (மூன்று பிரிவுகள்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து
மகளிர் போலீசார், தோழி வீட்டில் தங்கியிருந்த அரிபத்மனை செல்போன்
டவர் உதவியின் மூலம் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

முன்னதாக – சொல்லப்போனால், முத்தாய்ப்பாக கலாசேத்ரா அறக்கட்டளை கல்லூரியில்
பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அதே கல்லூரியின் முன்னாள் இயக்குநர், சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம்தான் முதலில் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்துதான்
கலாசேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்த சென்னை போலீஸ் கமிஷனருக்கு, தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

முன்னரே நாம் குறிப்பிட்டது போல் கலாசேத்ரா விவகாரத்தில் எல்லாமே
கூறப்படுகிறது, தெரிகிறது, பேசப்படுகிறது, புரிகிறது, என்றுதான் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. ’பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக
சொல்லப்பட்ட மாணவியே, தனது பெயர் மற்றும் கல்லூரியின் பெயரை
கெடுக்கவே தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது, அந்தத் தகவலைப் பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என திருவான்மியூர்
போலீஸ் ஸ்டேஷனில் ஒருபுகார் மனுவை அளித்தாக வெளியான இன்னொரு தகவலும் அதேபோல் சொல்லப்படுகிறது, கூறப்படுகிறது, தெரிகிறது, கருதப்படுகிறது வகையே.

இதற்கிடையேதான் இன்னொரு தகவலும் வந்தது. அதாவது, தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பிக்கு அனுப்பிய நோட்டீஸை
திரும்பப் பெற்று’ ள்ளதாக தெரிகிறது (ஆம் ! இனி எல்லாமே தெரிகிறது புரிகிறது, கருதப்படுகிறது சொல்லப் படுகிறதுதான்). அதேவேளையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகாஷர்மா, கலாசேத்ராவுக்கு வந்து ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தியுள்ளார். கலாசேத்ராவின் தற்போதைய
இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள்,
மாணவர்கள் அனைவரிடமும் பேசியுள்ளார்.

”கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரி, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது இன்னொரு தனி ட்ராக்.
’கலாசேத்ராவின் இயக்குநர் ரேவதி, நடனத்துறையின் தலைவர் ஜோல்ஸ்னா மேனன் ஆகியோர்,
குற்றவாளிகளைக் காப்பாற்றி வருகின்றனர்’ என்பதும் அதேபோல் புகாரின் இன்னொரு பக்கம்.

கலாசேத்ரா சொல்வது என்ன !?
”கலாசேத்ரா கல்வி நிறுவனம் மீது தேவையில்லாத வதந்திகளை பரப்பி
நிறுவனத்தை இழிவுபடுத்துகிறார்கள்”- இதுதான் கலாசேத்ரா சொல்லியிருப்பது.
‘கலாசேத்ரா வளாகத்தில் நடந்த சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கும் ஆலோசனை நடத்தவும் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் விசாரணை குழுவில் இடம் பெற்று உள்ளனர். பேராசிரியர் ஹரிபத்மன் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டு உள்ளார். கலாசேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு புகார்கள் குழு
அமைக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த
வகையில், கலாசேத்ரா மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் உள்ளது’ இவ்வாறு கலாசேத்ரா அறக்கட்டளை அறிவித்து உள்ளது. இந்த குழுவினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது.

கலாசேத்ரா விவகாரத்தில், ‘கூறப்படுகிறது தெரிகிறது பேசப்படுகிறது’ என்று சொல்லிதான் கட்டுரையை முடித்தாக வேண்டிய நிலை உள்ளது.
ந.பா.சேதுராமன்

Exit mobile version