Madras Kural

பள்ளி மாணவர்கள் மர்ம மரணம்… பதற்றம்!

திருவள்ளூர் மாவட்டம் அச்சர பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவர் மகன் (பெயர் மாற்றம்)) ராஜா. 13 வயது. பொன்னேரி கொக்கு மேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல் 30.3.2023 அன்று பள்ளிக்கு சென்றுள்ளான். மாலை 3 மணி அளவில் பாத்ரூமில் மாணவன் ராஜா, தலையில் ரத்த காயத்துடன் விழுந்து கிடக்கவே உடனடியாக அரசு பொன்னேரி மருத்துவமனைக்கு அங்கிருந்தோர் சிகிச்சைக்காக கொண்டு போயினர். ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவன் முன்னரே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து உரிய நேரத்தில் மாணவனின் பெற்றோருக்கு தனியார் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்க வில்லை என்ற உறவினர்கள், மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். பொன்னேரி போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் விழுந்து காயம் அடைந்ததாக கூறப்படும் பாத்ரூம் சுவற்றில் சிகப்பு நிறத்தில் இதயம் போன்ற வட்டத்துக்குள் NK_என்றும் P1 என்ற குறியீடும் இருப்பது தெரிய வந்துள்ளது. தனியார் பள்ளி மாணவனின் மரண பரபரப்பு அடங்குவதற்கு முன்னரே இன்னொரு மாணவனின் மர்ம மரணம் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். கூலித் தொழிலாளி. பாஸ்கரன் மகன் ராஜேஷ். (பெயர் மாற்றம்) 14 வயது. அதே பகுதி அரசுப் பள்ளி மாணவன். வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற ராஜேஷ், உடலில் காயங்களுடன் இறந்து கிடக்கவே ஆரணி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவனிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள், மர்மமான முறையில் இறந்து போன விவகாரம் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொன்னேரி கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) ஐஸ்வர்யா அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். இரு வேறு சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆரணி, செங்குன்றம், திருவள்ளூர், பொன்னேரி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்குன்றம் திருவொற்றியூர் பிரதான சாலையில் மாணவர்களின் உறவினர்கள் உயிரிழப்புகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

தேனீஸ்வரன்

Exit mobile version