Madras Kural

உலகத்தரத்துக்குசாலை போட்ட தமிழ்நாடு அரசு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் பருத்திநூல் இன்றி, தார் ஜல்லிக்கற்களை கொண்டு, சாலை என்றபெயரில் புதுவகை போர்வையை தயாரித்து பொன்னேரி நகராட்சி நிர்வாகம் அசத்தியிருக்கிறது. தொழு நோயாளிகள் செல்லும் பாதை என்றும் பார்க்காமல் நடந்திருக்கும் இந்த முறைகேடு, எந்த மாடலை பேசுகிறது என பொதுமக்கள் கேள்வி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், (ஒரிரு இடங்களை தவிர்த்து) பெரும்பாலான வார்டுகளில், ஏற்கெனவே நிலக்கரி சாம்பல் கழிவுகள், ஜல்லிக்கற்கள் கொண்டு; சிமெண்ட் சாலை என்ற பெயரில் போடப்பட்ட சாலைகளில் இருசக்கர ஊர்திகள் சென்றாலே புழுதி பறப்பதோடு; அதில் உள்ள ஜல்லிக்கற்கள் சிதறி; சாலையில் நடந்து செல்பவர்களை பதம் பார்த்து வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள 1- வது வார்டிற்கு உட்பட்ட, தொழுநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் குன்னமஞ்சேரி பகுதியில், மற்றொரு புது முயற்சியாக, நகராட்சி நிர்வாகம் சார்பில் பருத்தி நூல் இன்றி, தார் ஜல்லிக்கற்களை கொண்டு மெல்லியதாக சாலை என்ற பெயரில் கடந்த வாரம் ஒன்றை செய்துள்ளனர்.

33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ‘புதிய வகை போர்வை’ ஒன்றையே சாலை என தயாரித்து, தொழுநோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வண்டிகளில் வந்து செல்லும் பாதையில் அந்த “சாலை -போர்வை” யை போர்த்தி உள்ளனர். முப்பது நிமிடத்தில் தார் சாலை என்ற பெயரில் போர்த்தியுள்ள இந்த சாலை, கந்தல் துணி போன்று கைகளால் தேவையான அளவிற்கு பிரித்தும், பாயை போன்று சுருட்டி மடித்து வைக்கும் வகையிலும் மிகவும் தரமாக (?) போடப்பட்டுள்ளது.

கால்களில் ரணங்களுடன், வேதனையில் வாழும் தொழு நோயாளிகள் பயன்படுத்தும் இந்த சாலையை தரமாக அமைத்து தரும்படி தொழுநோயாளிகள் கேட்ட போது‌, “இந்த சாலையே உங்களுக்கு அதிகம்தான்” என நகராட்சி அதிகாரிகளும், திமுக வார்டு உறுப்பினரும், மிகுந்த தாய்ப்பாசத்தோடு பதிலளித்துச் சென்றதாக வேதனை தெரிவித்துள்ள தொழு நோயாளிகள்; “இந்த தாய்ப்பாசத்தின் பெயருக்கு என்ன மாடலில் பெயர் வைத்துள்ளனர் என்றுதான் தெரியவில்லை” என கண்ணீர் வடிக்கின்றனர்.

சாலை அமைக்கும் பணி முறைகேட்டில் ஈடுபட்ட, ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தரமற்ற சாலையை அகற்றிவிட்டு புதிதாக அங்கு சிமெண்ட்சாலை அமைத்துத் தர வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்‌.

தோழர்தோழர்

Exit mobile version