தொடர் பதிவு : 11
(சொந்த வீடு என்ற கனவு நனவாக)
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது கனவாக உள்ளது. சிலர் தனது வாழ்நாளில் அந்த கனவை நிறைவேற்றி விடுகிறார்கள். சிலருக்கு அதுகனவாகவே உள்ளது. வேறு சிலரோ சொந்தவீட்டை கட்டிவிட்டு பின்னர் அதனை விற்றுவிடுகிறார்கள். இதே போல் பூர்வீக சொத்து இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலை, இருக்கும் சொத்துக்கள் கைவிட்டு போகுதல்; இதுபோன்ற நிலை மாற என்ன பரிகாரம் செய்யலாம் என காண்போம்.
பூமி, சொத்து என எடுத்துக்கொண்டால் அதற்கு உரிய காரக கிரகம் செவ்வாய். ஒருவரது ஜனன ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றோ, நட்பு வீடுகளில் இருந்தோ, கேந்திரம் அல்லது திரிகோணம் (லக்னத்தில் இருந்து 4 மற்றும் 5வது வீடு)பெற்றோ வலுவாக இருந்தால்; அந்த ஜாதகருக்கு பூமி, நிலம் போன்ற சொத்துக்கள் இருக்கும். இதே போல் வீடு, வாகனம், சுகஸ்தானம் எனப்படும் 4 ம் பாவமும் அதன் அதிபதியும் கெடாமல் இருந்தால் சொந்த வீடு அமையும். செவ்வாயும், நான்காம் பாவமும் வலுவாக உள்ள ஜாதகருக்கு சொத்து சுகம் குறைவில்லாமல் கிடைக்கும். 4ம் பாவாதிபதி பகை, நீச்சம் பெற்று, அல்லது பாபர் சேர்க்கை பெற்று, 4 ம் பாவத்தில் பாபகிரகம் இருந்து அல்லது அந்த பாவத்தை தீய கிரகம் பார்த்தால் வீடு, வாகனம் பாதிக்கப்படும் என்பது ஜோதிட விதி. அது போன்ற நிலை உள்ள ஜாதகர்கள் பரிகாரம் செய்யும் போது அவர்களுக்கு நற்பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
பூர்வீக சொத்து இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலை, 5 ம் பாவம் பாதிக்கப்பட்டு இருந்தால் ஏற்படும். 4 ம் பாவத்தை போல் 5 ம் பாவத்தையும் ஆராய்ந்து, 5 ம் பாவாதிபதி பாதிக்கப்பட்டு இருப்தற்கேற்ப அந்த கிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் 4 மற்றும் 5 ம் பாவங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு இருக்கும் சொத்துக்களும் கைவிட்டு போகும். அந்த ஜாதகர் பாதிக்கப்பட்டுள்ள 4 மற்றும் 5 ம் பாவாதிபதி, அல்லது அந்த வீடுகளில் உள்ள கிரகங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
செவ்வாய் கிரகம் நீச்சம் பெற்று இருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ, செவ்வாய் கெட்டு இருந்தாலோ, அதற்கு செவ்வாய்க்கு உரிய பரிகாரங்களை செய்யலாம். அதாவது செவ்வாய் கிரகத்திற்கு உரிய கிழமையான செவ்வாய்கிழமை அன்று, நவகிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் செய்து; சிவப்பு வஸ்திரம் சாற்றி; அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். இதனை முதல் வாரம் செய்த பிறகு தொடர்ந்து பூமி, மனை, சொந்தமாகும் வரை வாரந்தோறும் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு புஷ்பம் சாற்றி; நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். அல்லது செவ்வாய்க்கு உரிய கடவுளான முருகனுக்கு செவ்வாய்க்கிழமைகள் மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தன்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடலாம். சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒருமுறை சென்று அங்காரகன் மற்றும் சுவாமி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கலாம். செவ்வாய்க்கு உரிய தானியமான துவரையை தானமாக வழங்கலாம். இதனை செவ்வாய் கிரகம் பலவீனம் அடைந்துள்ளதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப குறிப்பிட்ட வாரங்கள் செவ்வாய்கிழமைகளில் கால் கிலோ முதல் அரைக்கிலோ வரை அவரவர்கள் சக்திக்கு ஏற்ப துவரை தானம் செய்யலாம்.
4 ம் பாவ அதிபதி பாதிக்கப்பட்டிருந்தால் அந்த அதிபதி சூரியனாக இருந்தால் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலுக்கு ஒரு முறை சென்று வழிபடவேண்டும். சொந்தவீடு கிடைக்கும் நிலை வரும் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், நவகிரகத்தில் சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கால் கிலோ முதல் அரை கிலோ அளவில் கோதுமையை தானமாக வழங்கலாம். இதனை சூரியன் பலவீனம் அடைந்துள்ளதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப குறிப்பிட்ட வாரங்கள் கோதுமை அல்லது கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டி போன்ற சாப்பிடும் பொருட்களை தானமாக வழங்கலாம்.
4 ம் அதிபதி சந்திரனாக இருந்தால் ஒரு முறை கும்பகோணம் அருகே உள்ள திங்களூர் சென்று சந்திரனை வணங்க வேண்டும். பௌர்ணமி நாட்கள் மற்றும் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நவகிரகத்தில் சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கால் கிலோ முதல் அரை கிலோ அளவில் பச்சரிசியை தானமாக வழங்கலாம். இதனை சந்திரன் பலவீனம் அடைந்துள்ளதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப குறிப்பிட்ட வாரங்கள் பச்சரிசி அல்லது பச்சரிசி மாவில் செய்யப்பட்ட சாப்பிடும் பொருட்களை தானமாக வழங்கலாம்.
4 ம் அதிபதி செவ்வாய் கிரகமாக இருந்தால் மேலே செவ்வாய்க்கு கூறப்பட்டுள்ள பரிகாரங்களை செய்யலாம்.
4 ம் அதிபதி புதன் கிரகமாக இருந்து அது பாதிக்கப்பட்டு இருந்தால் சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டிற்கு ஒருமுறை சென்று அர்ச்சனை செய்து பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். புதன்கிழமைகளில் நவகிரகத்தில் புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். அல்லது சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். கால் கிலோ முதல் அரை கிலோ அளவில் பச்சை பயறு அல்லது பயத்தம் பருப்பு தானமாக வழங்கலாம். இதனை புதன் பலவீனம் அடைந்துள்ளதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப குறிப்பிட்ட வாரங்கள் பயத்தம் பருப்பு அல்லது பச்சை பயறு சுண்டல் செய்து புதனுக்கு படைத்துவிட்டு அதனை தானமாக வழங்கலாம்.
4 ம் அதிபதி குருவாக இருந்து அந்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தால், ஒருமுறை கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்கு சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். அத்துடன் வாரந்தோறும் வியாழக்கிழமையில் நவகிரகத்தில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கால் கிலோ முதல் அரை கிலோ அளவில் கொண்டக்கடலை தானமாக வழங்கலாம். இதனை குரு பலவீனம் அடைந்துள்ளதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப குறிப்பிட்ட வாரங்கள் கொண்டக்கடலை அல்லது கொண்டக் கடலையை சுண்டல் செய்து குரு பகவானுக்கு படைத்துவிட்டு அதனை தானமாக வழங்கலாம். மகான்களுக்கு பணிவிடை செய்து அவர்கள் ஆசி பெறுவதும் நல்லது.
4 ம் அதிபதியாக சுக்ரன் இருந்து அந்த கிரகம் கெட்டு இருந்தால் ஒருமுறை கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூருக்கு சென்று சுக்ரனை வழிபடவேண்டும். அத்துடன் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கால் கிலோ முதல் அரை கிலோ அளவில் மொச்சை தானமாக வழங்கலாம். இதனை சுக்கிரன் பலவீனம் அடைந்துள்ளதை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப குறிப்பிட்ட வாரங்கள் மொச்சை அல்லது மொச்சை சுண்டல் செய்து சுக்கிர பகவானுக்கு படைத்துவிட்டு அதனை தானமாக வழங்கலாம்.
4 ம் அதிபதி சனியாக இருந்து அந்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தால் ஒருமுறை திருநள்ளாறு அல்லது குச்சனூர் சென்று சனி பகவானை அர்ச்சனை செய்து வழிபடலாம். மேலும் வாரந்தோறும் சனிக்கிழமையில் சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடவேண்டும். சனி பகவானுக்கு எள்ளுருண்டையை படைத்துவிட்டு அதனை தானம் செய்யலாம்.
4 ம் அதிபதி ராகு அல்லது கேது சேர்க்கை பெற்று இருந்தாலும், பார்வை பெற்று இருந்தாலும் 4 ம் அதிபதிக்கு பரிகாரம் செய்வதுடன் ராகு, கேதுவிற்கும் பரிகாரம் செய்ய வேண்டும். ஒருமுறை கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகுவிற்கும் மயிலாடுதுறை அருகே உள்ள கீழபெரும்பள்ளம் சென்று கேதுவிற்கும் பரிகாரம் செய்யவேண்டும். மேலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவதும் நன்மை தரும். மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கால் கிலோ முதல் அரை கிலோ அளவில் உளுந்து தானியத்தை ராகுவிற்கு நைவேதியம் செய்துவிட்டு தானமாக வழங்கலாம். கொள்ளு தானியத்தை கேதுவிற்கு நைவேதியம் செய்துவிட்டு தானமாக வழங்கலாம். இதனை ஞாயிற்றுக் கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள ராகு மற்றும் கேதுவிற்கு நைவேதியம் செய்துவிட்டு அதனை தானமாக வழங்கலாம். 4ம் பாவாதியாக உள்ள கிரகத்திற்கு எத்தனை வாரங்கள் பரிகாரம் செய்யப்படுகிறதோ அதே வாரங்கள் அந்த கிரகங்களுக்கு பாதிப்பு கொடுத்துள்ள ராகு அல்லது கேதுவிற்கு செய்யவேண்டும்.
மேலும் 4 ம் பாவம் எந்த கிரகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த கிரகத்திற்கும் மேற் கூறியபடி பரிகாரங்கள் செய்ய வேண்டும். மிகுந்த நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களை செய்வது அவசியம்.
சிலருக்கு பரிகாரங்கள் செய்து சில வாரங்கள் அல்லது சில மாதங்களிலேயே பலன் கிடைக்க கூடும். வேறு சிலருக்கு கால தாமதமாகலாம். அது அவரவர் பூர்வ ஜென்ம பாப புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் தரும்.
கட்டுரையாளர்: ஜோதிட ரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி. ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-