Madras Kural

ஸ்பீட் பிரேக்கர்!அலறும் தேனி டூ ஓடைப்பட்டி மக்கள்…

தேனி டூ ஓடைப்பட்டி வழித்தடத்தில் பேக்கரி இருக்கும் இடங்களில் எல்லாம் இரண்டு வேகத்தடை காணப்படுகிறது. பேக்கரிக்கும் வேகத்தடைக்கும் என்ன உறவு என்பதுதான் தெரியவில்லை.

தேனி டூ ஓடைப்பட்டி வழித்தடத்தில் புதிதாக எந்த பேக்கரி ஆரம்பித்தாலும் அவர்களுக்கும் வசதியாக இரண்டு வேகத்தடை அமைத்துக் கொடுத்து நெடுஞ்சாலைத்துறை சிறப்பித்து வருவதாக வாகன ஓட்டிகளும்,அரசு பேருந்து ஓட்டுநர்களும் புலம்பி வருகின்றனர்.

தேனி டூ ஓடைப்பட்டி வழித்தடத்தில் தேனி புதிய பேருந்து நிலையம் தொடங்கி அரண்மனைபுதூர், கொடுவிலார்பட்டி, சிவலிங்கம்பட்டி விலக்கு, பாலகிருஷ்ணாபுரம் விலக்கு, நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரம், தாடிச்சேரி, தப்புகுண்டு, காட்டுநாயக்கன்பட்டி, வி.சி.புரம், ஜங்கால்பட்டி, எஸ். அழகாபுரி விலக்கு, காமாட்சிபுரம், எரக்கோட்டைபட்டி விலக்கு, சீப்பாலக்கோட்டை, கருப்பசாமி கோயில் விலக்கு, ஓடைப்பட்டி என, தேனியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட வழித்தடங்களை கடந்து ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு வருவதற்குள் (30 கிலோ மீட்டர்) சுமார் 65 வேகத்தடைகளை கடந்துதான் தீர வேண்டும். இதுவும் ஒருவகையில் கின்னஸ் சாதனைதான்.

தேனி டூ ஓடைப்பட்டி வழித்தடத்தில் தேனியில் இருந்து ஓடைப்பட்டி நோக்கியும், மறுபடியும் ஓடைப்பட்டியில் இருந்து தேனி நோக்கியும் ஒருமுறை வந்து திரும்பி செல்ல (ஒரு டிரிப்) 140 வேகத்தடைகளை கடக்க வேண்டும்.

வாங்கும் மாத சம்பளத்தை மருத்துவச் செலவுக்கே கொடுப்பதாக பேருந்து ஓட்டுநர்கள் சொல்லி சொல்லி குமுறுகின்றனர்.

“விபத்து பகுதி என்பதால் காவல்துறை அறிவுறுத்தலால் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இந்த வழித்தடத்தில் வேகத்தடை அமைத்தோம்” என்று நெடுஞ்சாலை தரப்பில் காரணம் சொல்கின்றனர்.

தனிநபர்களின் வியாபார வசதிக்காக அமைத்துள்ள வேகத்தடைகளை காலம் தாழ்த்தாமல் அப்புறப்படுத்தி வேகத் தடைகளை குறைக்க வேண்டுமென அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நபாசே

Exit mobile version