உலகத்தரத்துக்கு எதிர்ப்பதமான இனிப்பு உணவை தயாரிப்பதில் சென்னை சௌகார்பேட்டை ஏழு கிணறு முல்லாசாஹிப் தெருவில் இருக்கும் சில கடைகள் புகழ்பெற்று விளங்குவதை நேரில் போனால் பார்க்கலாம்.
பிரபல இனிப்பு தயாரிப்பு நிறுவன பெயர் கொண்ட நிறுவனத்தின் ஊழியர்கள், சுகாதாரமற்ற முறையில் இனிப்புகளை டன் கணக்கில் தயாரித்து பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளி வாகனங்கள் மூலம் (லோடிங் – அன் லோடிங்) ஏற்றி இறக்கும் காட்சிகள், அன்றாடம் பார்க்க முடியும். இனிப்பு பண்டங்கள் மேல் ஈக்கள் தோராயமாக ஐந்து கிலோ இருக்கும் போலிருக்கிறது. இது தவிர சௌகார்ப்பேட்டை பகுதியில், அதிகமாய் தயாரித்து விற்கப்படும் ‘காஜூ கத்தலி’ என்ற இனிப்புக்கு மவுசு அதிகம். இதை முறைப்படி சுத்தமான நெய்- முந்திரியில்தான் செய்ய முடியும், செய்யவேண்டும் அதுதான் நடைமுறை. நடப்பதோ வேறு. தரமான நெய்யோ முந்திரியோ சேர்க்காமல் செயற்கை சுவையூட்டி (எசென்ஸ்) கள் கலந்து அதில், ‘காஜூகத்தலி’ (?!) செய்து விடுகிறார்கள். இதை குடிசைத் தொழிலாகவே பலர் வீடுகளில் தயார் செய்து பாக்கெட்டுகளில் அடைத்து கிலோ கணக்கில் மொத்த கடைகளுக்கு விற்கிறார்கள்.
உணவுகடத்தல் மற்றும் பாதுகாப்புத் துறை (ஃபுட் சேஃப்டி அன்ட் கன்ட்ரோல் ஆபீசர்ஸ்) அதிகாரிகள் இதுபோன்ற விஷயங்களில் நடவடிக்கை மேற் கொண்டால்தான் அது பாதுகாப்பான தீபாவளியாகவே இருக்கும். இன்னொரு பக்கம் தீபாவளி இனிப்பு விற்பனை படுஜோராக போய்க் கொண்டிருக்கிறது. தீபாவளி இனிப்பு வாங்குகிறவர்கள் எப்படியோ எதையோ பிள்ளைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.
ராஜ்