பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த மண்டபத்தின் மேற்கு கூரையின் உள்புறத்தில் அந்தரத்தில் தொங்கியபடி படம் எடுத்து நல்ல பாம்பு ஆடியதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் முருகப் பெருமானை தரிசிக்க காத்திருந்தனர்.
அப்போது பக்தர்கள் காத்திருப்பு மண்டபத்தின் மேற்கூறையின் உள்புரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி திடீரென நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்களில் சிலர் அலறியபடி கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் பாம்பை கையெடுத்து பயபக்தியுடன் கும்பிடவும் செய்தனர்.
கோயில் நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் நிகழ்வு இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போக்கு காட்டிய அந்த நல்லபாம்பு மின்விசிறியில் பதுங்கிக் கொண்டது. இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் அதை பத்திரமாக சாக்குப் பையில் அடைத்து வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.
இசம்பவத்தினால் கோவில் வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்.கோ.முத்து