Madras Kural

ஆறாவது மாடி! அறை எண் 6001… சொந்த கோட்டைக்கு திரும்பும் கோட்டை!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான ‘கோட்டை’, மீண்டும் ஓமந்தூரார் மாளிகையில் செயல்படக் கூடிய நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணத் தோணுகிறது! தற்போது இயங்கிவரும் புனித ஜார்ஜ் கோட்டையின் உள் அரங்கும், அமைச்சர்கள், துறை ஐஏஎஸ் களின் அலுவலகங்களும் இட நெருக்கடியோடுதான் இருக்கிறது என்கிறார்கள். இந்திய ராணுவத்துக்கு சொந்தமான கோட்டையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகக் கோட்டை செயல்படுவதில் நிறையவே சிக்கல் இருக்கிறது. இந்திய ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பு, கேண்டீன், பயிற்சி மையம் என அடுத்தடுத்து அமைந்துள்ள இடத்தில்தான் தலைமைச் செயலகமான கோட்டையும் ஒரு இடத்தில் இயங்கி வருகிறது. கோட்டைக்கு இத்தனை ஆண்டு அக்ரிமெண்ட் இருக்கிறது என்றார்கள், வாடகை செலுத்துகிறோம் என்றார்கள், இனி பிரச்சினை இல்லை- கோட்டை தமிழ்நாட்டுக்குத்தான் என்றார்கள்… இப்படியே ஒவ்வொரு காலகட்டத்திலும் அதே இடத்தில் ‘கோட்டை’ யை நிறுவிக்கொள்கிற உறுதி வார்த்தைகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில்தான் அரசினர் ஓமந்தூரார் மாளிகையும், போலீஸ் ஐ.ஜி. அலுவலகமும் இணைகிற அண்ணாசாலையில் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, புதிதாக அடுக்குமாடி கோட்டையை நிறுவினார். சட்டமன்றப் பேரவை, தலைமைச் செயலகம், முதலமைச்சர் மற்றும் சபாநாயகர், கொறடா, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசு உயரதிகாரிகள் என அனைவருக்கும் தனித்தனி அறைகள் உருவாக்கப் பட்டது. செய்தியாளர்களுக்கான அறை, மனமகிழ்மன்றம், விளையாட்டுத்திடல் என அத்தனையும் ஒரு இடத்தில் சிறப்பாக அமைந்த கோட்டையாக, 930, 297- சதுர அடிப்பரப்பில் புதிய கோட்டை அமைந்தது. 2008-ல் தொடங்கி 2010-ல் கட்டி முடிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் கோட்டையை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் திறந்து வைத்து விழாவில் பாங்கேற்றனர். 2011-ல் ஜெ.ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அமைக்கப்பட்ட கோட்டையை நிராகரித்தார்.

“தலைமைச் செயலகம் மருத்துவக் கல்லூரியாக செயல்படும், சட்டமன்ற வளாகம் மருத்துவமனையாக மாற்றப்படும்” என்று அறிவித்தார். ஓமந்தூரார் மாளிகையில் இயங்கி வந்த ‘கோட்டை’ திறப்பு விழா கல்வெட்டுகளை அன்றைய அதிகாரிகள் அகற்றினர். கருணாநிதி, சோனியா, மன்மோகன் சிங் பெயர்கள் பதித்த கல்வெட்டுகள் காணாமல் போயின. தேசிய பசுமைத் தீர்ப்பாயம், புதிய கோட்டையில் மருத்துவமனையை தொடர 2013 – ல் பச்சைக் கொடி காட்டியது. அதன் பின்னர் சுமார் பத்தாண்டு காலம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே கோட்டை திரும்பியது. ஐந்தாண்டு காலம் ஜெயலலிதா, சிலமாதங்கள் ஓ. பன்னீர்செல்வம், நான்காண்டுகள் எடப்பாடி பழனிசாமி என அதிமுகவின் மூன்று முதலமைச்சர்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சியை நடத்தி முடித்தனர். 2021-ல் திமுக தலைமையிலான ஆட்சி, தமிழ்நாட்டை ஆளத் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில், காணாமல் போடப்பட்ட மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களைத் தாங்கிய கல்வெட்டுகள் மீண்டும் அதே இடத்தில், அதே ஓமந்தூரார் கோட்டையில் பொருத்தப்பட்டன. கோட்டையாக, தலைமைச் செயலகமாக இருந்து அரசின் பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கோட்டை முகக் ‘களை’ வரத் தொடங்கியிருக்கிறது. முன்னதாக சில நிகழ்வுகளும் இயல்பாய் நடந்தேறியது. பெருந்தொற்று நோயாக உலகளவில் அறியப்பட்ட கொரோனாவை முறியடிக்க, ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும், இரவு பகலாக அரசு பெரிய மருத்துவமனைகளில் தங்கியே ஆகவேண்டிய கட்டாயம் ! சென்னைக்காரரான சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நிரந்தரமாகவே தங்கி விட்டார். ஆறாவது மாடி, அறை எண் 6001- ல் அமைச்சர் மா.சு. தங்கியே ஆகவேண்டிய சூழல் வலுவில் உண்டானது. சீனியர் உடன் பிறப்பு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “அண்ணே, மூணாவது மாடி, அறை எண் 3001- ஐ தான் முதலில் தேர்வு செய்தோம்… அந்த எண்ணுள்ள அறையில் கார்டியாலஜி (இதய சிகிச்சை) செயல்பட்டு வந்தது. கொரோனா தீவிரத்தை முறியடிக்க தங்கியிருக்கும் அறைக்கு கட்சிக்காரர்கள் அடிக்கடி தேடி வந்துவிடக் கூடாதே என்றுதான், ஆறாவது மாடி அறை எண் 6001 -ஐ பிடித்தோம்” என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியம் மட்டுமல்ல, சுகாதாரத்துறை செயலாளரும் இதே ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தான் ஒரு அறையில் தங்கியிருக்கிறார்.. ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில், சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில், 30 ஏக்கர் பரப்பில் அரசு பன்னோக்கு மருத்துவமனையை இடமாற்றம் செய்யும் பணிகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருப்பதாக தெரிகிறது. சென்னையில் அடுத்தடுத்து அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனை, அரசு கீழ்பாக்கம் மருத்துவமனை, அரசு பல் மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகள் அமைந்துள்ளன. சென்னைக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வடசென்னையில் அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனை இருக்கிறது. சென்னை புறநகர் தொடங்குகிற இடமாக அமைந்துள்ள கிண்டியில் அதேபோல் ஒரு பிரமாண்ட அரசு மருத்துவமனை அமைவது எதிர்காலத்துக்கு நல்லதாகவே இருக்கும் என நம்பலாம். தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் இருந்து அரசின் பன்னோக்கு மருத்துவமனைக்கு வருவோர்க்கு கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஆறுதலாகவே இருக்கும். ஐந்தாண்டுகள் கழித்து வேறு யார் ஆட்சியைப் பிடித்தாலும் மீண்டும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையாக தலைமைச் செயலகமாக (எதிர்காலத்தில்) மாறப் போகும் கோட்டையை இடம் மாற்றம் செய்து விடாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அதை மருத்துவமனையாக திட்டமிட்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வடிவமைக்கவில்லை, கோட்டையாகத்தான் அதை வடிவமைத்தார் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. என்ன இருந்தாலும் தமிழ்நாடு அரசின் கோட்டைக்கு இத்தனை சோதனைகள் வந்திருக்கக் கூடாது ! தொடக்கம் முதல் இப்போது வரை கவனித்தாலே நான் சொல்வதின் காரணம் விளங்கும். இப்போதைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் (1920 -முதல் 1937 -வரை) கவுன்சில் சேம்பர்ஸ் அரங்கில் வைத்துதான் முதல் சட்டமன்றக் கூட்டம் நடந்தது. 1937 -ன் பிற்பகுதியில் மெட்ராஸ் யூனிவர்சிடியின் செனட் அரங்கில் தொடங்கி,1939- வரை அங்கேயே சட்டமன்றம் தொடர்ந்தது. பின்னர் கொஞ்சகாலம் இப்போது இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் ஒரு பாதியான ராஜாஜி அரங்கில் நடந்தது. 1952-ல் ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் நடந்தது. கலைவாணர் அரங்கம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் சட்டமன்றம், அங்கு இடம் மாறியது. 1956 -முதல் இப்போது உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மீண்டும் மாறியது. 1983 -84 -ல் கோட்டையை திருச்சிக்கு மாற்ற அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முயற்சி செய்தார். 2002-ல் முதலமைச்சர் ஜெயலலிதா, மாமல்லபுரம் அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நிர்வாக அலுவலகம் அமைக்க முயன்றார். பின்னர் மெரீனாவில் இடம் பார்த்தார், எதிர்ப்பு வலுத்ததால் அதை கிடப்பில் போட்டார். கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியை தேர்வு செய்தார், ஆனால் இடம் போதாது என்ற நிலையால் அதை கைவிட்டார். அடுத்ததாக அருகிலிருந்த ராணிமேரி கல்லூரியை தேர்வு செய்ய அதற்கும் எதிர்ப்பு பெரிதாய் வலுக்க அதையும் கைவிட்டார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலை வளாகத்தில் கோட்டை அமையப் போவதாக 2004-ல் செய்திகள் வந்தது, பின் அதுவும் அப்படியே நின்று போனது. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் (இப்போது அரசு பன்னோக்கு மருத்துவமனை) ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் வாடகை இல்லாத சொந்த கோட்டையாக தமிழ்நாடு அரசுக்கான கோட்டை நிறுவப் பட்டது. 2010- ல், கருணாநிதி கட்டிய கோட்டையில் அதே ஆண்டு மார்ச் 16 ம் தேதி சட்டமன்றக் கூட்டம் நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, அந்த கோட்டையின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார், புனித ஜார்ஜ் கோட்டைக்கு தமிழ்நாடு அரசின் கோட்டை இடம் மாறியது… மீண்டும் கோட்டை இடம் மாறப் போகிறது – தமிழ்நாடு அரசாங்கத்தின் சொந்தக் கட்டிடத்தின் கோட்டையாக அது இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி. சிறப்பு. பாராட்டுகள். வாழ்த்துகள் !

– ந.பா.சேதுராமன்

Exit mobile version