
பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்திற்கான பாலாலய விழாவை சிவாச்சாரியார்கள் வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு சிவபெருமானால் ஏற்பட்ட சாபம் விலக பார்வதி தேவி இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 11 அமாவாசைகள் வழிபட்டதாக ஐதீகம்.
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேல்
ஆன நிலையில் கோவிலை புனரமைத்து மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாலாலய விழாவிற்கான கணபதி பூஜை, கோ பூஜை, சிறப்பு யாக கலச பூஜை ஆகியவை நடைபெற்ற நிலையில் சிவாச்சாரியார்கள் முக்கிய புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த கலசங்களுக்கு, சிறப்பு யாகங்கள் நடத்தினர்.
தொடர்ந்து மேலதாளங்கள் முழங்க புனித நீர் கலசத்துடன் ஆலயத்தை வலம் வந்த சிவாச்சாரியர்கள் சாஸ்திரப்படி அத்திப்பலகையில் வரையப்பட்ட தெய்வத் திருமேனிகளுக்கு அஷ்டபந்தன மகா பாலாலயத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர்.
பெருந்திரளான பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களை பக்தியுடன் வழிபட்டு கோவில் திருப்பணி சிறப்புடன் நடைபெற பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பொன்.கோ.முத்து