Madras Kural

மீடியாக்கள் ஸ்டாலினுக்கு ஏன் பயப்பட வேண்டும்? டி.ஜெயகுமார் கேள்வி

சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :

பொய் வழக்குகள் மூலம் கழகத்தை அழித்துவிட வேண்டும் என்று விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த விடியா அரசு ஆரோக்கியமான விமர்சனத்திற்கு ஜனநாயக ரீதியில் பதில் சொல்ல வக்கில்லாமல் பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்து விட்டால் குரல் ஒலிக்காது என்ற இறுமாப்புடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை எந்த ஒரு அடக்குமுறைக்கும் அஞ்சாத இயக்கம். சிறைக்கு அஞ்சாத இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் புரிந்து கொள்ளவேண்டும். பொய் வழக்குகள் போட்டு விட்டால் ஆட்சிக்குறித்து விமர்சனம் செய்வதைத் தடுத்துவிடலாம் என்று இறுமாப்பு கொண்டால் அது, பூனை அதன் கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டது என நினைக்குமாம், அதுபோலத்தான் ஸ்டாலினுடைய நினைப்பு உள்ளது. என்னுடைய கழக இயக்கப்பணியை முடக்கவேண்டும் என்பதற்காக இப்படிப் பொய் வழக்குகள் போட்டுள்ளார். திருச்சியில் 14 நாட்கள். இங்கு தினமும் கையெழுத்து. என்னுடைய கையெழுத்து இந்த அரசுக்கு நிறையத்தேவையென்று நினைக்கிறேன். ஸ்டாலின் கையெழுத்து செல்லாது. என்னுடைய கையெழுத்துதான் இனி செல்லுபடியாகும் என்று நினைக்கிறேன். அதனால் தினந்தோறும் நான் கையெழுத்து போடவேண்டும் என்பது அவர் விருப்பம்.
இவ்வாறு அவர் டி.ஜெயகுமார் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி விபரம் : கேள்வி : அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காகித கப்பல்களாகத்தான் இருந்தது என்று முதல்வர் தெரிவித்துள்ளாரே?
பதில் : அவருடைய அப்பா கருணாநிதியை நினைவு படுத்துகிறார் ஸ்டாலின். கருணாநிதி காகிதஓடம் என்றொரு பாடலை எழுதினார். அதுபோல இன்றைக்கு டோரா பயணம் நடந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் டோரா பயணத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். எந்த அளவுக்கு அந்தப் பயணம் பிசுபிசுத்தது என்று தெரியும். அவர் சென்றது ஒரு இன்ப சுற்றுலா, குடும்ப சுற்றுலா. இந்த இன்ப சுற்றுலா குறித்து எந்த ஊடகமும் வாய் திறக்க வில்லை. 6 மாதம் நடந்த இந்த துபாய் கண்காட்சி முடியப் போகும் 4 நாட்களில் சென்று அரங்கை திறக்கிறாராம். இப்படிப்பட்ட முதலமைச்சர் தமிழகத்திற்குக் கிடைத்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை நாம் பார்த்தால் வேதனைதான் உண்டாகிறது. 4 நாட்களில் முடியப்போகும் கண்காட்சியைத் திறந்த ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே ஸ்டாலின்தான். முதலீட்டைப் பெற்று வந்துள்ளோம். 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்கிறார். இதுவரை இவர் அறிவித்த தொழிற்பேட்டைகள் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால் வேலைவாய்ப்பு உண்டாகும் என்று அறிவித்த அறிவிப்பும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இப்போது 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பதையும் அவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். தேர்தலுக்கு முன்னர் என்னை எப்போது வேண்டுமானாலும் நேரடியாக சந்திக்கலாம். அதற்கு ஒரு கார்டு அளிப்போம் என்று ஸ்டாலின் சொன்னாரா இல்லையா? அதன்படி எத்தனைபேரை இதுவரை இவர் சந்தித்துள்ளார் என்று தெரிவிக்கட்டும். நீங்கள் பெட்டியில் போடும் மனுமீது நடவடிக்கை எடுக்க அதனை நானே திறப்பேன் என்றார். எப்போது திறந்தார் பெட்டியை? கல்லா பெட்டியை திறந்துள்ளாரே தவிர மக்களுடைய மனு பெட்டியைத் திறந்ததாகச் சரித்திரமே கிடையாது. எத்தனை மனு வந்தது. எத்தனை மனுவுக்குத் தீர்வு கண்டீர்கள். எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தத்தீர்கள். எவ்வளவு பிரச்சனையைத் தீர்த்தீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? உங்கள் ஆட்சி வந்தபிறகு மக்கள் மனம் நொந்துவிட்டனர் என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இன்று மூதாட்டியின் சங்கிலியைப் பறித்துச் செல்கிறார்கள். இப்படிப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. எல்லா தரப்பிற்கும் இதுபோன்ற நிலைதான் உள்ளது. ஆனால் விளம்பர அரசு மட்டும், வெற்று விளம்பர அரசாக நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வதை விட அவருடைய ஒரே பணியாக மேற்கொண்டிருப்பது கழகத்தை ஒடுக்க வேண்டும் என்பதை மட்டுமே தனது பணியாக மேற்கொண்டிருப்பதுதான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை ஒழித்து விடவேண்டும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக் காப்பாற்றிய இந்த இயக்கத்தை ஒழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக காவல்துறையின் மூலம் எதிர்க்கட்சியினரை முடக்கும் வேலையை மட்டும் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆட்சிக்கு வந்து 9 மாதம் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேங்காய் உடைப்பது போல 108 வாக்குறுதியாம். இப்படி வாய்கிழியப் பேசுகிறார்கள். இதற்கு சில ஊடகங்கள் ஜால்ரா போட்டுவருகிறது. என்னுடைய பேட்டியை ஒலிபரப்ப ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. சில ஊடகங்களைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் என்னுடைய பேட்டியை ஒலிபரப்பவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நீங்கள் பயந்து இருக்கவேண்டிய அவசியம் என்ன? பத்திரிக்கைத்துறை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண். மனசாட்சியை தொட்டு, விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயல்படுங்கள்.இதுதான் ஊடகத் துறைக்கு நல்ல விஷயமாக இருக்கும்.

கேள்வி :
அரசு ஊழியர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள். எனவே பால் விலை, பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளாரே?
பதில் :
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியருக்குப் பாலும், தேனும் ஒடும் என்றார்கள். ஆனால், தொழிலாளர் விரோதப் போக்கையும், அரசு ஊழியர் விரோதப் போக்கையும்தான் இந்த அரசு கடைபிடித்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொன்னவர்கள் இன்று அதனை நிறைவேற்ற வேண்டுமா இல்லையா? ஆனால், அது குறித்து வாயையே இவர்கள் திறக்க மறுக்கிறார்களே? அரசு ஊழியர்களுக்குப் பட்டை நாமம் போட்டு விட்டார்கள். நிதி நெருக்கடி இருந்த நிலையிலும்கூட எந்த பிரச்சனையும் இல்லாமல் நாட்டு மக்களுக்கு விலைவாசியை அம்மாவின் அரசில் கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். எந்த விலை ஏற்றத்தையும் செயல்படுத்தி மக்களுக்குச் சுமையைத் தரவில்லை. ஆனால் இன்று நடப்பது என்ன?
உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் நல்ல பரிசு காத்துக்கொண்டுள்ளது என்று நான் திருச்சியில் தெரிவித்திருந்தேன். சொத்து வரியை ஏற்றுவார்கள். பால்விலையை ஏற்றுவார்கள். மின்கட்டணத்தை உயர்த்துவார்கள். பேருந்து கட்டணத்தை அதிகரிப்பார்கள். மக்கள் தலையில் சுமையைச் சுமத்தும் அளவுக்கு இந்த ஆட்சி தயாராகி வருகிறது. மக்கள் இதனை உணர வேண்டும். இதைத்தான் அமைச்சர் நேரு பிரதிபலித்திருக்கிறார்.
கேள்வி :
அடுத்த வாரம் சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறாரே?
பதில்:
இந்தியாவில் யார் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் போகலாம். இந்தியநாடு சுதந்திரநாடு. இதற்கும் கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எங்கு வேண்டுமென்றாலும் சுதந்திரப் பறவையாகச் சுற்றலாம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

– கோட்டையன் –

Exit mobile version