Madras Kural

சிவ பூஜையும் கரடியும் !

சிவபூஜையில கரடி நுழைஞ்ச மாதிரி, அவன் வந்து மொத்தத்தையும் கெடுத்துட்டான் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம்… சிவபூஜையில் உண்மையிலேயே கரடி நுழைந்ததா, அப்போது சிவபூஜையை செய்தது யார்? என்ற கேள்வியும் வருகிறது அல்லவா, உண்மைக் கதைதான் என்ன?


கரடி என்பது காட்டில், மலைப்பகுதிகளில் வாழும் கருந்தேகம் கொண்ட கரடி அல்ல!
ஆதிகாலங்களில் அரசர்கள், மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வகுப்பதில் முன்னோடியாக திகழ்ந்தனர். குளம் வெட்டுதல், சாலை அமைத்தல், மரங்களை பராமரித்தல் போன்ற பொது விஷயங்களோடு, மக்களின் குடும்பப் பிரச்சினைகள் வரை மன்னரின் பிரதிநிதிகள் வாயிலாக தீர்த்து வைக்கப் பட்டு வந்தது. தவிர மக்களும் நாடும் நலமாய் இருக்க யாகம் வளர்ப்பதையும், சிவபூஜை செய்வதையும் ஆன்மிக திருப்பணிகள் செய்வதையும் தவறாமல் செய்து வந்தனர்.
மன்னர்கள்(அரசர்கள்) தொடங்கி வைக்கும் எல்லாப் பணிகளின் துவக்கத்திலும் சிவபூஜை செய்வது வழக்கத்தில் இருந்து வந்தது.  சிவ பூஜை செய்து ஈசனை வழி பட்ட பின்னரே அனைத்தும் நடக்கும் என்பதை கடமையாகக் கொண்டிருந்தனர். சிவ பூஜை செய்யும் பொழுது ஏதேனும் தடங்கலோ இடையூறோ ஏற்படாமல் இருக்க, ‘கரடி வாத்தியம்’ வாசிக்கச் செய்வதும் வழக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் மன்னர்களின் யாகம், சிவபூஜை எல்லாம் காணாமல் போய், மந்திரிகள், அதிபர்கள், பிரதமர்கள் காலம் ஆகிவிட்டது. சிவபூஜையில் இசைக்கப்பட்ட கரடி வாத்தியமும் காணாமல் போய் விட்டது. ‘சிவபூஜையில் நுழைந்த கரடி போல’ என்ற வாசகம் மட்டும் தொலைய வில்லை – நின்று நுழைந்து நிலைத்தே விட்டது. ஒரு ராகத்தை இசைத்த வாத்தியத்தின் (கரடி) பெயரை மிருகமாக்கி இன்றளவிலும் மேற்கோளுக்காக மக்கள் பயன்படுத்துகின்றனர். இன்னொரு தகவலையும் ஆன்மிகச் சான்றோர் தெரிவிக்கின்றனர்.
உருமி வாத்தியத்தைப் போன்றதே ‘கரடி’ இசைக் கருவியும். தாளஓசையும் மற்றொரு இசை (ஓசை)யும், இடை நில்லாது ஒலிப்பதே கரடிவாத்தியம். அரசர்கள் கோயிலுக்கு செல்லும் வழியில், (இந்தக் காலக் கட்டத்தில் மந்திரிகள் வருகைக்கு போலீசார் சைரன் வாகனத்தில் முன்னால் போய் போக்குவரத்தை சீர் செய்வது போல) கரடி வாத்தியக் கருவியை வாசித்து மன்னர் வருவதை மக்களுக்கு முன்கூட்டி அறிவித்து வந்தனர்.
சில இசைக் கலைஞர்கள் ஆர்வமிகுதியில், பூஜை -யாகம் நடக்கிற கோயிலுக்குள்ளும் கரடி வாத்தியத்தை வாசித்தனர். சிவ வழிபாட்டின் போது புலன்களும், பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க விடாமல் கரடி வாத்தியம் அதிக சத்தத்தோடு இருந்ததால், “சிவபூஜையில கரடி வாத்தியம் (நாளடைவில் வாத்தியம் தொலைந்து கரடி மட்டுமே மிச்சம் ஆனது) எதற்கு?” என்று கேள்வி எழுப்பப் பட்டது. மனம் ஒரு நிலையில் குவிந்திருக்கும் போது மன்னனுக்கு கரடி வாத்திய இசை ஒரு தடையா? என்று இன்னொரு தரப்பு ஞானக்கேள்வியை முன் வைத்தது – என்கிறார்கள்… இப்போது எந்தக் கேள்விக்கும் விடை இல்லை…

-சேரான் –

Exit mobile version