Madras Kural

உழைப்பாளர் தினத்தில் உயிரிழந்த உழைப்பாளிகள் !யார் காரணம்?

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோவிந்தன் மற்றும் சுப்புராயலு. இவர்களில் கோவிந்தன் அரசுப் பணியாளர். இருவரும் அதே பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியின் கழிவுநீர் தொட்டியை (செப்டிக் டேங்க்) தூய்மைப்படுத்த அதற்குள் இறங்கி நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் அருகில் இருந்தவர்கள் மேலிருந்தபடியே கழிவு நீர் தொட்டியை எட்டிப் பார்த்தபோது தொழிலாளர்கள் இருவரும் மயங்கிய நிலையில் தொட்டிக்குள் இருந்துள்ளனர்.

தீயணைப்புத் துறையினருக்கு தகவல் செல்லவே, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் முகத்தில் சுவாச கவசம் அணிந்தபடி தொட்டிக்குள் இறங்கி பார்த்தபோது உள்ளே மயக்கத்தில் கிடந்த தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தது, தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் உடல்களும் அங்கிருந்து மீட்கப்பட்டது.
இருவரின் உடல்களையும் மீஞ்சூர் போலீசார் கைப்பற்றி உடற்கூராய்வு பணிக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒப்பந்தப் பணியாளரும் நிரந்தரப் பணியாளரும் ஒன்றாகவே செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும் பணியை செய்ய முற்பட்டுள்ளனர்.
உலக உழைப்பாளர் தினமான மே 1-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும்
தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்ட வரும் நிலையில் தொழிலாளிகள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பதை சொல்லும் அதே வேளையில்…

இந்த மரணம் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய மரணம் என்பதையும் உறுதியாகவே சொல்ல வேண்டும்.

கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய குழிக்குள் இறங்கிய வகையில் 2019- ஆம் ஆண்டில் மட்டுமே (அதிகபட்சமாக) 110 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர்த் தொட்டியில் இருக்கும்
அம்மோனியா ammonia -கார்பன் டை ஆக்ஸைடு- carbon-dioxide
கார்பன் மோனோ ஆக்ஸைடு -carbon monooxide சல்பர் டை ஆக்ஸைடு -sulphur di oxide- நைட்ரஜன் டை ஆக்ஸைடு -nitrogen di oxide- போன்ற வாயுக்களின் தாக்குதலால் உயிரிழப்பு நடக்கிறது.
கழிவுநீர்த் தொட்டிகளில் பெரும்பான்மையாக இருக்கக்
கூடியது ஹைட்ரஜன் சல்பைடு (hydrogen sulphide) வாயுதான்.
மீத்தேன், அம்மோனியா, கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களுக்கும் குறை இருக்காது. குழியில் இறங்கும் தொழிலாளி ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை சுவாசிக்கும்போதுதான் தலைவலி, வாந்தி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்தை எதிர்கொள்கிற நிலை கட்டாயமாகி விடுகிறது.
’மனித மலத்தை மனிதனே அள்ளக்கூடாது என்றும் அதற்கான
பிரத்யேக கருவிகள் துணையுடன் போதுமான பாதுகாப்பு கவசங்களுடன் தக்க மேற்பார்வையாளர் முன்னிலையில் செய்யலாம்’ என்கிறது, சட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள்…

ஆனால், நேற்று நான்குபேர் , இன்று இரண்டு பேர், நாளை எத்தனையோ
என்றளவில்தான் மலக்குழி மரணங்கள் அணிவகுக்கின்றன. இறப்புக்கு நட்ட ஈடு, விசாரணை, மலக்குழியை சுத்தம் செய்ய அழைத்துப்போனவர் மீது வழக்கு விசாரணை தீர்ப்பு…
ஸ்ப்ப்ப்ப்ப்பா….. தாங்க முடியலடா சாமீ !
சட்டத்தை நீங்கள் மதிக்கும் லட்சணம், லட்சம் கோடி பெறும் அதிகாரிகளே…

பொன்.கோ. முத்து

Exit mobile version