Madras Kural

ஆமைகளுக்கு தொடரும் ஆபத்து|

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையில் கொத்து கொத்தாக இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள். வங்கக் கடல் மாசால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு நெருங்கி வரும் ஆபத்து.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரையிலான வங்கக்கடல் கடற்கரையில் ஆங்காங்கே கொத்து கொத்தாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள நிகழ்வு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் ஆமைகள் உயிர் இழப்புக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக நிகழ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு நடத்தி ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக அதன் இறைச்சி, ரத்தம் மற்றும் அவைகள் இறப்பதற்கு முன்பாக உட்கொண்டு செரிமானம் ஆகாமல் வயிற்றில் இருந்த உணவுகளை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

அதன்பின் கடற்கரையிலே வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆமைகளின் உடல்களை குழி தோண்டி புதைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவைகளின் உயிரிழப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் அத்திப்பட்டில் இருந்து- சென்னை எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் செயல்பட்டு வரும், அனல் மின் நிலையங்கள், நடுவண் அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன நச்சு கழிவுகள், நிலக்கரி சாம்பல் கழிவுகள், துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல் போக்குவரத்து, அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தி வீசி எரியும் நெகிழி குப்பைகள் அனைத்தும்-அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அவைகள் கொண்டு வந்து கொட்டப்படும் குப்பை கிடங்காக திகழ்வது ஆரணி மற்றும் கொசத்தலை ஆறாகும்.

ஆற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது வெளியேற்றப்படும் உபரி நீருடன் அடித்துச் செல்லப்பட்டு பழவேற்காடு- எண்ணூர் பகுதியில் கடலில் சேர்வதின் காரணமாக வங்கக்கடல் மாசடைந்து அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், மற்றொருபுறம் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடி விசைப்படகுகள், சிறியகப்பல்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்படுவதால், பெண் ஆமைகள் ஆண் ஆமைகளின் பாதுகாப்புடன் கடல் நீரிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தனது துடுப்புகளின் உதவியால் சின்னச் சின்ன குழிகளைத் தோண்டி முட்டையிடுகின்றன. பிறகு அந்தக் குழியை மூடிவிட்டு கடலுக்குத் திரும்பி விடுகின்றன. அதுபோன்ற தருணங்களில் மீன்பிடி கப்பல் சுருக்கு வலைகளில் சிக்கிக் கொள்வதாலும்; 100 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய ஆமைகள் அதிக அளவில் உயிரிழக்க நேரிடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று கடந்த ஆண்டு – சென்னை மெரினா முதல் கோவளம் கடற்கரை வரை நூற்றுக்கணக்கில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.

இந்நிலையில்தான், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என கண்டறியப்பட்டதா, ஆமைகள் உயிர் இழப்பை தடுப்பதற்கு தமிழக அரசு எடு்த்த நடவடிக்கைகள் என்னவென்று தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. அதற்கு அரசு தரப்பில், “இந்த பிரச்சினை தொடர்பாக அரசு தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என்றும் அதில், கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல் மீன்பிடி ஒழுங்கு படுத்தும் சட்ட அமலாக்கப்பிரிவு, தமிழ்நாடு கடலோர காவல்படை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் தலைமையில் சிறப்புக்குழு (Task Force) அமைக்கப்பட்டுள்ளது, இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல்சார் அமலாக்கப்பிரிவு, தமிழக கடலோர காவல்படை ஆகிய துறைகளின் அலுவலர்கள் அடங்கிய கூட்டு ரோந்துக் குழு கடல் பகுதிகளில் மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களின் நடமாட்டத்தில் விதிமீறல் உள்ளதா என கண்காணித்து, விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகள், வனத்துறை, மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம்; தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆமை இறப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன” என அப்போது தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “ஆமைகள் உயிரிழப்புக்கு காரணமான சுருக்கு எனப்படும், இழுவை மடிவலைகளைப் பயன்படுத்திய கப்பல்களை அரசு கண்டறிந்ததா? எத்தனை மீன்பிடிக் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பாயம் தரப்பில் கேள்வி எழுப்பியபோது. அதற்கு மீன்பிடிக்கும்போது உரிய வழிமுறைகளைப் பின்பற்றாத மீன்பிடிக் கப்பல்கள், படகுகளுக்கு டீசல் மானியம் உள்ளிட்ட சலுகைகள், நலத்திட்டங்கள் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்த போதிலும், இதுவரை அவற்றை நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதை கட்டுப்படுத்தவும், மாசடைந்து வரும் வங்கக்கடலை பாதுகாக்கவும் நடுவண்- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்று ஆமைகள் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்குவதை தடுக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்.கோ.முத்து

Exit mobile version