
சென்னை, பல்லாவரம், தனியார் பல்கலைக்கழகப் பேராசிரியை ஷோனா (35) தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு, அசோக் பிருந்தாவனம் நகரில் வசித்து வருகிறார். நேற்று பேராசிரியர் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டி வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முக கவசம் அணிந்தபடி வந்த மர்மநபர்கள், ஷோனா மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்துபோன ஷோனா, ரத்தம் சொட்ட மயங்கி விழுந்தார். ஷோனா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகையை அந்த மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். பலத்த காயங்களுடன் பொதுமக்களால் மீட்கப்பட்ட ஷோனா, போலீசார் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷோனா மீதான தாக்குதல், வெறும் கைகளால் நிகழ்த்தப்பட்டதா, வேறேதும் ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டனவா என இப்போதைக்கு தெரியவில்லை. வாக்கிங் போகும் பெண்கள், பால் வாங்க, காய்கறி வாங்க கடைவீதிகளுக்குச் செல்லும் பெண்களை குறிவைத்துத் தாக்கி தாலிச் சங்கிலி அறுக்கும் வழிப்பறி கொள்ளை கும்பல், க்ரைம் வரலாற்றில் முதன் முறையாக மோட்டார்சைக்கிளில் செல்லும் பெண்ணை குறிவைத்து தாக்கி கழுத்து நகையை பறித்துச் சென்றிருக்கிறது.
சென்னையில் மட்டுமே கடந்த 2025 மார்ச் மாதத்தில் ஒரே நாளில் ‘தடிவாலா’ கும்பல் போன்ற வெளிமாநிலக் கொள்ளை கூட்டத்தினரால் 8 இடங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டன. இந்த கும்பலை வான்வழி மற்றும் ரயில் நிலைய கண்காணிப்பு மூலம் 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது. பேராசிரியை ஷோனா மீது தாக்குதல் நடத்தி கை வரிசை காட்டியவர்கள், இது போன்ற வெளிமாநிலக் கும்பலைச் சேர்ந்தவர்களா அல்லது போதை ஆசாமிகளா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை போய்க் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் கழுத்தில் தங்கம் இருந்தால் ஸ்கூட்டியில் போனாலும், நடந்து போனாலும் ‘தங்கச்சங்கிலிபறிப்பு’ திட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும் போல…
வெற்றி