போதை பொருள் நடமாட்டம் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் நடமாட்டம் தடுப்பு நடவடிக்கையின் முதற் கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியை மேற் கொள்ள போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ள விபரம் : கஞ்சா, போதைப் பொருட்கள், போதைப் பொருளாகப் பயன்படுத்துகிற உடல்வலி நிவாரண மாத்திரைகளுக்கு எதிராக, ‘போதை பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ (DAD- Drive Against Drugs) என்ற பெயரிலும், தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ (DABToP -Drive Against Banned Tobacco Products) என்ற பெயரிலும், சிறப்பு கண்காணிப்பு (ம) சோதனைகள் நடத்தப் படுகிறது. சட்டவிரோதப் பொருட்களை கடத்துவோர், பதுக்கி வைப்போர், விற்போர் யாவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
மாணவ சமுதாயம் போதை, புகையிலை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு ஆளாகமல் தடுக்க சென்னை பெருநகரிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் தணிக்கைகள் அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த குற்றத்தில் 262 வழக்குகள் பதிவு செய்து, 268 நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 277 கிலோ குட்கா, மாவா புகையிலை பொருட்கள், 9,234 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
01.04.2022 முதல் 16.04.2022 வரையிலான 16 நாட்கள், தீவிர கண்காணிப்பு. சோதனைகள் (ம)வாகனத் தணிக்கைகள் மூலம் சென்னையில் கஞ்சா கடத்தி வருதல் பதுக்கி வைத்தல், விற்றல் தொடர்பாக 155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 209 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 149 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், கஞ்சா, போதை பொருட்கள், குட்கா, மாவா புகையிலை பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்தல், சட்ட விரோதமாக விற்பனை செய்தல் குறித்து அறிந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், ‘தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்’ என்று கமிஷனர் தெரிவித்துள்ளார்.
– விகடகவி எஸ். கந்தசாமி