Madras Kural

“பள்ளி மீதான பிரசாரம் தவிருங்கள்” கோட்டாட்சியர் வேண்டுகோள் |

சென்னை திருவொற்றியூர் விக்டரி பள்ளி மாணவியர் மயங்கி விழுந்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடைபெற்றது.

திருவொற்றியூரில் இயங்கி வரும் விக்டரி தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வாய்வு கசிவு ஏற்பட்டதாக கூறி 35 மாணவிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்பிய நிலையில் அந்தப் பள்ளியில் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் சம்பவத்தன்று ஏற்பட்ட பாதிப்பு குறித்து அப்போது கேட்டறியப்பட்டது. கூட்டத்தில் கோட்டாட்சியர் இப்ராஹிம், சென்னை மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு (திமுக), மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர், பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த மாத இறுதியிலும் இந்த மாத தொடக்கத்திலும் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இதற்கிடையில் பெற்றோர்களின் எதிர்ப்பால் தொடர்ந்து பள்ளி திறக்கப் படாமல் உள்ளது.சம்பவம் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த நான்கு நாட்களாக பள்ளியில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

முடிவில் எந்தவித விஷவாயுவாலும் பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப் படுத்தினார்கள்.இந்த சூழ்நிலையில் அந்தப் பள்ளியில் 35வளர்ப்பு முயல்கள் வளர்க்கப்படுவதாகவும் அந்தமுயல்கள் வெளியேற்றும் சிறுநீர்மற்றும் எச்சங்களால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம்‌ என்று தெரிய வந்ததின்பேரில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள மீட்டிங்ஹாலில் அம்பத்தூர் ஆர்டிஓ இப்ராஹிம் தலைமையில் பெற்றோர்கள் பள்ளி தாளாளர்கள் லாரன்ஸ் ரூத்வனிதா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் மண்டலக் குழுதலைவர் தி.மு.தனியரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காவல் துறை மாநகராட்சி உட்பட பலதுறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் ஆர்டிஓ இப்ராஹிம் கூறும்போது, எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பள்ளியில் உள்ள 35வளர்ப்பு முயல்களின் மூலம்வெளியேறும் சிறுநீர் மற்றும் எச்சங்களால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அதனால் அந்த முயல்கள் வெளியேற்றப் பட்டுள்ளன.
பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று அந்தபள்ளியில் உள்ள 10,11 மற்றும் 12 ஆகிய 3வகுப்புகள் திறக்கப்படுவதற்கு முன், இறுதியாக ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டம் நடந்தவுடன், அரசு உத்தரவின் பேரில் மீண்டும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

மேலும், “இந்தப் பள்ளியில் பயிலும் 5 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப் படுவதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. சில தொலைக் காட்சிகளில் இந்தப் பள்ளியைப் பற்றி தவறான பரபரப்பு தகவல்கள் பரப்பப் படுகிறது. அதை கட்டுப்படுத்திட ஊடகங்களின் ஒத்துழைப்பும் அரவணைப்பும் அவசியமானது” என்று கேட்டுக் கொண்டார்.


கி.ம.வா. மற்றும் பாலமுகம்

Exit mobile version