தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! வீர வணக்கம். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் விடுதலை பெற்ற பின்னர் சமூக, பொருளாதார சமத்துவத்திற்காக தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்ட தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் தான் மூச்சு விடுவதை நிறுத்திக் கொண்டார்.
அவரின் வாழ்க்கையே மக்களுக்கு அவர் விட்டுச் சென்றுள்ள செய்தி. பொதுவுடைமை இலட்சியங்களை உயர்த்திப் பிடித்து, மக்களை உழைக்கும் வர்க்கமாக அணிதிரட்டும் பணிகளை அனைத்து நிலையிலும், அனைவரும் மேற்கொண்டு, பொதுவுடைமை சமூகம் படைக்க உறுதியேற்பதே அவருக்கு செலுத்தும் மெய்யான அஞ்சலியாக அமையும்.
தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பாக செவ்வணக்கம் செலுத்துகிறோம். சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட அரசு பல்கலைக்கழகம், தனது விதிகளின் படி உரிய முறையில் நூற்றாண்டை கடந்து வாழும் விடுதலைப் போராட்ட வீரரை கௌரவிக்கும் வகையில் “கௌரவ டாக்டர் பட்டம்”வழங்க இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும், பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவிவழிப் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு ஆளுநர் தனது கையொப்பத்தை இட மறுத்ததால், விடுதலைப் போராட்ட வீரருக்கு பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்திட இயலாமல் போனது.
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
படிக்கும் காலத்தில், நாட்டின் விடுதலைதான் முக்கியம் என்று கருதி, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அன்னிய ஏகாதிபத்திய அரசு அவரை சிறையில் அடைத்தது. அதன் விளைவாக அவரால் தேர்வு எழுதி பட்டம் பெற இயலவில்லை. அரசியல் விடுதலை பெற்ற பிறகு, மக்களின் சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்திய பல்கலைக்கழகத்தால் அவருக்கு அன்று பட்டம் வழங்க இயலவில்லை. இன்று விடுதலைப் பெற்ற இந்தியாவின் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தந்து கௌரவித்து, அதன் மூலம் விடுதலைப் போராட்டத் தியாகியை கௌரவித்த பெருமையை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பெற வேண்டும் என்று பல்கலைக்கழகம் தீர்மானித்தது.
பல்கலைக்கழகத்தின் முடிவை ஏற்க மறுத்து அதன் கல்வியியல் செயல்பாட்டு சுதந்திரத்தில் தலையிட்டதுடன், அதன் தன்னாட்சிக்கு சவால் விட்டுள்ள ஆளுநர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரை அவமதித்துள்ளார்.
தனக்காக வாழாமல், உழைக்கின்ற மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தோழர் என் சங்கரய்யா அவர்களுக்கு பல்கலைக் கழகம் வழங்கும் டாக்டர் பட்டம் எந்த வகையிலும் பயன்பட போவதில்லை. தமிழ்நாடு மாநில பல்கலைக் கழகத்தால் இந்திய விடுதலைப் போராட்ட வீரரை கௌரவிக்க இயலாமல் போனது தமிழர்களுக்குதான் அவமானம்.
தமிழ்நாடு ஆளுநரின் செயலை வரலாறு மன்னிக்காது. சமத்துவ சமூகம், சமதர்ம இந்தியா என்ற இலட்சியத்தை அடைய தோழர் என். சங்கரய்யா வழியில் அடுத்த தலைமுறை தளராது பயணிக்கும்.
செவ்வணக்கம்!
இவ்வாறு பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.