மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு வாரிக் குவிக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர்
என்கின்றனர் ஊர் மக்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ளது பிரம்மபுரம் ஊராட்சி.
பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராதாகிருஷ்ணன்.
மணல் மாஃபியாக்களுடன் கை கோர்த்துக் கொண்டு ஊராட்சி மன்றத்தலைவரே செயல்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பும்
லட்சத்தில் தொடங்கி கோடிகளில் கொள்ளையும் போவதாக குற்றச்சாட்டு வலுவில் உள்ளது.
மணல் சுரண்டல் – கொள்ளையைத் தடுக்க வேண்டியவர்களே, கைகட்டி வாய் பொத்தி, ராதாகிருஷ்ணன் டீமோடு இணக்கமாக நடந்து கொள்கின்றனர் என்கிறார்கள்.
பிரம்மபுரத்தில் மணல் குவாரி எதுவும் ஏலம் விடப்படவில்லை என்றாலும், ஏலம் விடப்படாத ஒரு பகுதியில் மணல் மாஃபியாக்களை வைத்துக்கொண்டு பகல், இரவு நேரங்களில் இடைவிடாது
திருட்டுத்தனமாக மணலை கடத்துவதே முழு நேரத் தொழிலாக பிரம்மபுரம் மாறிப்போய் இருக்கிறது
ஒருமுறை காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் பிரம்மபுரம் கிராமத்துக்குச் சென்று ‘இங்கிருந்து யாரும் ஒருபிடி மணலைக் கூட இனிமேல் எடுத்துச் செல்லக் கூடாது’ என்று உத்தரவிட்டதோடு ஜேசிபி வைத்து பள்ளத்தை தோண்டி விட்டு, ‘இனி யாராவது மணல்
அள்ளினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று
எச்சரித்து விட்டு வந்தார். வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் சென்ற அரை மணி நேரத்திற்குள் அந்தப் பள்ளம் மூடப்பட்டு மீண்டும் மணல் அள்ளத் தொடங்கி விட்டது கொள்ளை டீம்.
பிரம்மபுரம் கிராமத்தில் மணலைக் எடுத்துச் செல்ல முடியாத அளவில் முறையான வேலியோ அல்லது காம்பவுண்டு சுவரோ அமைத்து நிரந்தரமாக தடை ஏற்படுத்த வேண்டும் என்பது ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மேற்பார்வையில் மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை அமைச்சர் ஆகியோரின் நடவடிக்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு…
நபாசே