ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாரதி சமரன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அது குறித்த விபரம் :
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் ஆலத்தூரில், சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 30க்கும் மேற்பட்ட பல இரசாயனத் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
கடந்த 1982ம் ஆண்டு இந்த சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது உள்ளூர் மக்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. சிட்கோ ஆரம்பித்து கிட்டதட்ட 42 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஒப்புக்குக்கூட ஆலத்தூர் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆலத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் படித்த இளைஞர்கள் பெரும் அளவில் உள்ளனர் ஆனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களை, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.
உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை இல்லை. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு தொழிற்சாலைகளை அணுகினாலும் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கப்படுகின்றனர். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவு பறிபோய் உள்ளது. ஆலத்தூரில் தொழிற்சாலை ஆரம்பித்து நிலம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொண்டு, உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை தரமறுப்பது ஒப்பந்தத்தை மீறி செயலாகும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, ஆலத்தூர் சிட்கோ தொழிற்சாலைகளில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை அளிக்க முன் வருவது மட்டுமின்றி தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு நிதியின் கீழ் ஆலத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
மேலும் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை துவங்கப்பட்ட போது வடிகால்வாய் வசதியுடன் சாலைகள் போடப்பட்டன. பாதாள சாக்கடை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் பராமரிப்பின்றி சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. வடிகால்வாய்களும் தூர்ந்து கழிவுநீர் வழிந்தோடி சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தெரு விளக்குகளும் சரிவர எரியாததால் இரவுப் பணி முடித்துவிட்டு வீடு திரும்புவோர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் தொழிற்பேட்டை பராமரிப்பிற்கு போதிய பணத்தை சிட்கோவிடம் வழங்குகின்றன, இருந்தும் சிட்கோ நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் இந்த சிட்கோ தொழிற்சாலைகளில் இருந்து அதிகப்படியான நச்சுப்புகை வெளியேற்றப்படுவதால், மக்களுக்கு சரும நோய்களும் சுவாச கோளாறுகளும் ஏற்படுகின்றன. சிட்கோ தொழிற்சாலைகளிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் எவ்வித மறுசுழற்சி இன்றி நேரடியாக பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது.எனவே மாவட்ட ஆட்சியர் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கண்டு உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்படுவதை தடுத்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி எதிர்கால இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்திட வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார் பாரதி சமரன்.
(படம் பாரதி சமரன் – சமரன்)
பிரீத்தி எஸ்.