தமிழ்நாட்டில் 251 ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்களை (பில் -புக்) அச்சிட்டு
விநியோகம் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பெண் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மற்றும் பிரபல தொழில் நிறுவன அதிபர்கள் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது.
சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் மலர்விழி.
ஐ.ஏ.எஸ். அதிகாரி. சென்னை விருகம்பாக்கம், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கிறார். இன்று (06.06.2023) காலை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் மலர்விழி வீட்டுக்கு திடீரென சென்றனர். சோதனைக்கான காரணம் தெரிவித்துவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியராக 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி பணியில்
சேர்ந்து 2020-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி வரை மலர்விழி ஐஏஎஸ், அங்கு பணி புரிந்துள்ளார். பணிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி
வசூல் செய்வதற்கு சொத்து வரி ரசீது புத்தகம், குடிநீர் கட்டண ரசீது புத்தகம்,
தொழில் வரி ரசீது புத்தகங்களை அச்சிட்டு வாங்கியதில் முறைகேடு
நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மலர்விழி மீது லஞ்ச ஒழிப்புப்போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐஏஎஸ் அதிகாரியான மலர்விழி, இதில் (ஏ-ஒன்) முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2-வதுகுற்றவாளியாக சென்னை சுப்பாராவ் நகரைச் சேர்ந்த கிரசண்ட் நிறுவன உரிமையாளர் தாகீர் உசேன், பத்மாவதி நகரைச் சேர்ந்த நாகா டிரேடர்ஸ் உரிமையாளர் வீரய்யா பழனிவேலு ஆகியோர் சேர்க்கப் பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களை நடத்தி வரும், தாகீர் உசேன், வீரய்யா பழனிவேலு இருவரும் வரி வசூல் புத்தகங்களை அச்சிட்டு கொடுப்பதில் நடந்த முறைகேட்டிற்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்ததில், ரூபாய் 1.5 கோடி வசூலிப்பில் முறைகேடு நடந்திருப்பதாக போலீசார்
குற்றம்சாட்டி உள்ளனர். ரசீது புத்தகங்களை அச்சிடுவதற்கு மலர்விழி ஐ.ஏ.எஸ் ரூ.1 கோடியே 31 லட்சத்து
77,500 -ஐ கூடுதலாக கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
”வரி வசூல் ரசீது புத்தகங்களை அச்சிட்டு வாங்குவதில் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி அரசின் நிதியை, மோசடி செய்யும் எண்ணத்துடன் குற்றவியல் சதியில்
ஆட்சியர் பொறுப்பிலிருந்த அதிகாரி மலர்விழி ஈடுபட்டிருப்பது தெரிய
வந்துள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் ஏதும் கோரப்படாமல் இரண்டு தனியார் நிறுவனங்களில் இருந்தும் அதிக விலைக்கு புத்தகங்கள் வாங்கப் பட்டுள்ளன. இப்படி, 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 வீட்டு வரி ரசீது புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
2 மற்றும் 3-வது குற்றவாளிகளான தனி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
தொகை, தர்மபுரி மாவட்ட அச்சு பொறிகளின் விலையுடன் ஒப்பிடும் போது முற்றிலும் அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.” என, எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை)
கோப்பில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தெரிவித்து உள்ளனர். தற்போது, மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்பட 3 பேர் மீதும் 120பி (கூட்டு சதி) மற்றும் ஊழல்
தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்ததாகவும் அதிக சொத்து குவித்ததாகவும் இவர்கள்
மீது புகார்கள் எழுந்தன. இப்போது நடந்து கொண்டிருக்கும் சோதனையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகங்களில்
போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியின் வீடு உள்பட சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் என மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புபோலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், தர்மபுரியில் தலா ஒரு இடத்திலும் புதுக்கோட்டையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர்- கம்- தொழிலதிபர் பழனிவேல். அரசு ஒப்பந்ததாரர். ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க., புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர்.
சகோதரர்கள் இருவருக்கும் நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உண்டு. ஆரம்பத்தில் ஒன்றாக இருந்து தொழில் ரீதியாக தற்போது பிரிந்து விட்டனர். இவர்கள் வீடு- அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன். தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசிக்கிறார். 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரியில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், நல்லம்பள்ளி,
பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தருமபுரி உள்ளிட்ட பணி புரிந்து வந்தார். தற்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர். 2019-ம் ஆண்டுகளில் பென்னாகரம் வட்டார
வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பணியை (?) மேற்கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில் கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் கிருஷ்ணன் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. தற்போது தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணனின் வீட்டில் சோதனை
நடத்தி வருகின்றனர். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக
கிருஷ்ணன் விட்ட டெண்டர் தொடர்பான முறைகேட்டில் சிக்கி உள்ளதாக தெரிகிறது.
விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி, சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாகா டிரேடர்ஸ், சுப்பாராவ் நகரைச்
சேர்ந்த ஜாகீர்உசேனுக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ், காஞ்சிபுரம்
மடிப்பாக்கம் பகுதியில் உள்ள வன ரோஜா என்பவருக்கு சொந்தமான
ஆர்.வி.என். ஆகிய நிறுவனங்களுக்கும் மொத்தமாக இந்த முறைகேடுகளில்
தொடர்பு உள்ளது என்பதே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவல்.
மேற்கண்ட 4 நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக போலீசார், மொத்தம் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். 2-வது எப்.ஐ. ஆரில் தர்மபுரி மாவட்டத்தை
சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், விழுப்புரத்தை சேர்ந்த பாப்பாத்தி, சென்னையை சேர்ந்த வீரய்யா பழனிவேலு, தாகீர் உசேன், காஞ்சிபுரத்தை சேர்ந்த வனராஜா
ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை நடத்தி வருகின்றனர்…
பி.எஸ்.கே.பாரதி