Madras Kural

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தாக்கப்பட்ட அதிகாரி! பின்னணி என்ன?

புகார் கடிதம்

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., கண்முன்பாகவே உயரதிகாரியான (கண்காணிப்பாளர்) கே.சக்திவேல் தாக்கப் பட்டிருக்கிறார். தாக்கியவர், முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன்.
வாகன அப்ரூவல் பதிவு (ரெஜிஸ்ட்ரேசன் அப்ரூவல்) யார் கொடுப்பது என்ற வாக்குவாதத்தின் தொடர்ச்சியாகவே கண்காணிப்பாளர் சக்திவேல் தாக்கப் பட்டார் என்கின்றனர்.
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில அலுவலகத்தில் மட்டும் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தும் அளவுக்கு புகார் கொடுக்கிற விவகாரமாகவே இந்த தாக்குதலை யாரும் பார்க்கவில்லை! சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார், விசாரணை ஸ்டேஜிலேயே நிற்கிறது.
சங்கத்தின் மாநிலத் தலைவர், சுப. விஜயகுருசாமி அவர்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டோம். “புகார் வந்திருப்பது உண்மைதான், அது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்… முழுமையான விபரத்தை நிச்சயம் உங்களுக்கு தெரிவிக்கிறோம்” என்றார்.
தாக்குதலுக்கு ஆளான கண்காணிப்பாளர், கே. சக்திவேல், “தாக்கப்பட்டது உண்மைதான். புகார் செய்திருக்கிறேன். மேலதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர். சொல்ல வேறொன்றுமில்லை” என்று முடித்துக் கொண்டார்.
ஏதாவது தவறு செய்தால் மெமோ கொடுக்க வேண்டிய அதிகாரப் பதவியில் இருக்கும் ஒருவரை அவருக்குக் கீழே பணியாற்றும் ஒருவர், அலுவலகத்தில் அனைவர் கண்முன்னே தாக்குதல் நடத்தியிருப்பது, தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆர்.டி.ஓ ஏரியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், “ஆர்.டி.ஓ. விடம் சூப்பிரண்டெண்ட் சக்திவேல் பேசிக் கொண்டிருக்கும் போதே, பிரபாகரன் (M.V. I -1) சூப்பிரண்டெண்ட்டை அடித்து விட்டார், இரண்டாவது முறையும் அவர் அடிக்க பாய்ந்த போதுதான் நாங்கள் மொத்த பேரும் அதை தடுத்து விட்டோம்… போலீசில் புகாரளித்து நடவடிக்கை எடுக்காமல் விஷயத்தை மேலதிகாரிகளிடம் சொல்லி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் ஆர்.டி.ஓ. புகார் அளிக்க வேண்டிய இடத்தில் உள்ளவரே ஆர்.டி.ஓ. தானே?” என்று கேள்வி எழுப்புகின்றனர். பொது இடங்களிலும் போலீஸ் ஸ்டேசன்களிலும் பேச்சு வார்த்தை நடத்தினால் அதற்குப் பெயர் கட்டப் பஞ்சாயத்து – அதையே ஆர்.டி.ஓ. ஆபீசில் செய்தால் சமாதான பேச்சுவார்த்தை போலிருக்கிறது!
முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர், (MVI -1) பிரபாகரனுக்கு அரசியல் பின்புலமும், சமூக -பொருளாதார பின்புலமும் – என்ன , அவரை இயக்குவது யார் என்ற கேள்வியும் இதில் முன் வைக்கப்படுகிறது !
விகடகவி எஸ். கந்தசாமி

தாக்கப்பட்ட அதிகாரி சக்திவேல்
Exit mobile version