Madras Kural

சென்னையில் சிக்கியது! ரூ.30லட்சம் கள்ளநோட்டு…

சென்னை மணலி புதுநகரில் கடந்த 12ஆம் தேதி, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து புதிதாக சிலர் குடியேறினர். வீட்டின் உரிமையாளருக்கும் அக்கம் பக்கத்து ஆட்களுக்கும் புதுக்குடித்தன நபர்கள் மீது சந்தேகம் ஏற்படும் சூழல் சில நாளிலேயே உருவானது. இரவு வேளையில், “200 ரூபாய் கட்டுகள் எல்லாம் அவனிடம் கொடு, 500 ரூபாய் கட்டுகளை இவனிடம் கொடு” என்று பஞ்சாயத்து ஓடியதே சந்தேகம் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வீட்டிற்குள் சென்று புதுக்குடித்தன நபர்களிடம் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணான தகவல்களே அப்போது கிடைக்க, வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் கத்தை கத்தையாக 16 லட்ச ரூபாய் மதிப்பிலான 200 ரூபாய் கள்ள நோட்டுகள், மற்றும் மூன்று அதி நவீன வண்ண பிரிண்டர்கள் இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்த மணலி புதுநகர் போலீசார், வீட்டிலிருந்த யுவராஜ், பிரபாகரன், இம்தியாஸ், ஜான் ஜோசப், ரசூல்கான், முபாரக் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். அடுத்த கட்டமாக யுவராஜ், இம்தியாஸ், ரசூல் கான் ஆகியோரை இரண்டு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்த போது, ஆட்டோ ஒன்றின் இருக்கைக்கு அடியில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வைத்துள்ளதாக தெரிவித்தனர். அதையும் அங்கிருந்த ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் மூன்று பேரையும் காவல்துறையினர் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

-தேனீஸ்வரன் –

Exit mobile version