Madras Kural

ரவுடி கருக்கா வினோத் விவகாரம்! முடிவெடுத்த கோர்ட்…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு 2023- ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், 10 ஆண்டுகள் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டவர் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருக்கா வினோத்.

ரவுடியான கருக்கா வினோத்தை, வேறொரு வழக்கில் நீதிபதி முன்பு நேர்நிறுத்த போலீசார் கொண்டு வந்து நிறுத்திய போது; நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும்; வேதனையையும் அளிக்கக் கூடியது. தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகமான தி.நகர் கமலாலயத்தில் 2022-ஆம் ஆண்டும் இதேபோல் பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றவர்தான், கருக்கா வினோத்.
பாஜக அலுவலகம் மீதான தாக்குதலில், ஜாமீன் கிடைக்காமல், ஓராண்டு தொடர்ந்து சிறையில் இருந்து வந்த ஆத்திரத்தில்; அடுத்து நடத்திய தாக்குதல்தான்; கிண்டி ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் என்று கருக்கா வினோத் கொடுத்திருந்த வாக்குமூலம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில், கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் 12.11.2025 – அன்று தீர்ப்பளித்தது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தை, தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், மீண்டும் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

சென்னை தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடை மீது, பெட்ரோல் குண்டு வீசிய மற்றுமொரு வழக்கில், கருக்கா வினோத்தை போலீசார், 13.11.2025 -அன்று சென்னை 6-வது கூடுதல் நீதிமன்றத்தில் மீண்டும் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, கருக்கா வினோத் திடீரென நீதிபதி மீது காலணி வீச முயற்சித்ததைப் பார்த்த போலீசார், அவரை நொடிப்பொழுதில் தடுத்து நிறுத்தி; போலீஸ் வாகனத்தில் ஏற்றி வெளியே கொண்டு போய் விட்டனர்.

இதையடுத்து கருக்கா வினோத் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, சிறையில் இருந்தே காணொலி வாயிலாக அவரை ஆஜர்படுத்த; போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

சேரான்

Exit mobile version