திருவள்ளூர் அருகே சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் கொண்ட ரவுடி கும்பல், உணவக உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரை அரிவாளால் வெட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் செம்புலிவரம் கிராமத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். வழக்கம்போல் கடந்த 1ஆம் தேதி மீண்டும் அந்த கும்பல் சாப்பிட வந்த போது பாக்கியராஜ் சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உணவகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியது. உணவக உரிமையாளர் பாக்யராஜ் இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த கும்பல் மீண்டும் உணவகம் வந்தது; அங்கிருந்த பாக்கியராஜ், அவரது மனைவி முருகவள்ளி, சகோதரர் சின்னமுத்து மற்றும் உணவக ஊழியரை அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான ரவுடி கும்பலை தேடி வருகின்றனர். இந்த நிலையில் ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தும் நேரடி காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
P.K.M.