திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள், (12.10.2023 ) இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷை போலீசார் தேடி வந்தனர்.
இருவரும் புதூர் மாரம்பேடு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்கவே போலீசார் அங்கு சென்றதாகவும் இருவரையும் போலீசார் பிடிக்க முயன்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
தற்காப்புக்காக, முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவர் மீதும் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், முத்துசரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க பலத்த காயமடைந்த சண்டே சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்ததாக நெவிபிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் ஆகிய காவலர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப் பட்டிருக்கிறது.
மடிப்பாக்கம் திமுக பிரமுகர் கொலை, பாடியநல்லூர் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை உள்பட பல முக்கிய கொலை -கொலை முயற்சி வழக்குகளில் கொல்லப்பட்ட இருவரும் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு போலீசாரை நேரடியாக அனுப்பி ‘திருந்தப் பாருங்கள்’ என்று எச்சரிக்கை விடுக்கச் செய்திருந்தார். அதேபோல் ரவுடிகளுக்கு அடைக்கலம் தருவோர் என சந்தேகத்துக்குரிய நபர்களையும் தேடிச்சென்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரேநாளில் இரண்டு ரவுடிகளை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையின் கீழ் இயங்கும் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
PKM