Madras Kural

கம்யூ.தோழர் நல்லகண்ணு சிலை| பாரத ரத்னா விருது : பாமக தீர்மானம்|

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீரரும் முதுபெரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான ஆர். நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நிர்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தியும் நடுவண் அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில இணைச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான எஸ். கே. சங்கர், கூடுதல் தேர்தல் பொறுப்பாளர் தாம்பரம் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய களப்பணிகள், திண்ணைப் பிரச்சார கூட்டங்கள் மூலம் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரது சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஆர். நல்லகண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பாமக நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மறைந்த முதுபெரும் தலைவர் ஆர். நல்ல கண்ணுவிற்கு மெரினா கடற்கரையில் முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும், அவரது புகழை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் எனவும், இதேபோன்று நடுவண் அரசு சுதந்திர போராட்ட தியாகியான அமரர் ஆர். நல்லகண்ணுவிற்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி செயலாளர் சுதாகர், டில்லிபாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

.தோழர்தோழன்

Exit mobile version