திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பத்தை சேர்ந்தவர் டேவிட். வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வந்த இவரது மகன் பிரவீன்(21).நேற்று மாலை வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பலஇடங்களில் பிரவீனை தேடியும் காணாத நிலையில் இன்று காலை அவரது சடலம், புழல் ஏரியில் கரை ஒதுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டது. பிரவீன், ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிர் இழந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர், பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் ஏரி போன்ற ஏரிகளிலும் கடலிலும் ஏனைய நீர்நிலைகளிலும் குளித்து மகிழ பொதுமக்களுக்கு போலீசாரும் வருவாய்த் துறையினரும் விதித்துள்ள தடையை ஒருபோதும் பொது மக்கள் மதிப்பது இல்லை. இந்த மீறல் விடுமுறை நாள்களில் அதிகமாவதால் மதிப்பற்ற மனித உயிர்கள் சிதைகிறது தொடர்கதையாகிறது.
பொன்.கோ.முத்து