Madras Kural

தனியார் பள்ளிகள் எச்சரிக்கை பின்னணி என்ன?

சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு – சங்கங்கள் சார்பில், ‘தனியார் பள்ளிகள் இயங்காது’ என்று அறிக்கை கொடுத்துள்ளனர்! “நாளது 18.07.2022 முதல் (?) தனியார் பள்ளிகள் இயங்காது. காலையில், போலீஸ் எஸ்.பி. ஆபீஸ் மற்றும் கலெக்டர் ஆபீஸ்களில் தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு கேட்டு நாங்கள் மனு கொடுக்கப் போவதால் தனியார் பள்ளிகள் நாடு முழுவதும் இயங்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சமூக விரோத கும்பல்தான் வன்முறையில் இறங்கியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஊழியர்கள் பாதுகாப்பு இதனால் கேள்விக்குறி ஆகியுள்ளது. பள்ளி மீது முன்னரே (!) இருந்த காழ்ப்புணர்வு காரணமாகத்தான் தாக்குதல் நடந்துள்ளது, போலீஸ் மீதும் அதனால்தான் தாக்குதல் நடத்தியுள்ளனர், பஸ்களையும் எரித்துள்ளனர்” – என்று அந்த அறிக்கை போகிறது. பள்ளிக்கும், தீவைப்பு போராட்டக் காரர்களுக்கும், எந்த வகையில் முன்விரோதம் இருந்தது என்பதை போலீசாரிடம் சங்கத் தலைவர்கள் விளக்கி சொல்லலாம். போலீசாரின் புலன் விசாரணைக்குப் பின்னர் தெரிய வேண்டிய பல விஷயங்கள், சங்கத் தலைவர்களுக்கு முன்னரே தெரிந்திருப்பது வியப்பளிக்கிறது. இன்னொரு சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், (அறிக்கை- 2) ‘தனியார் பள்ளிகளை பாதுகாக்க தொடர் உண்ணாவிரதம், தொடர் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ – என்று சொல்லியுள்ளனர். கலவரம் நிகழ காரணமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் 70பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர் – வழக்கு ஒரே நாளில் சிபிசிஐடி போலீஸ் கைக்கு போயுள்ளது. பள்ளி நிர்வாகம் மீதும் வழக்குப் பதியப் பட்டுள்ளது. இந்நிலையில், ‘தனியார் பள்ளிகள், நாளை முதல் இயங்காது என்பதும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம், வேலை நிறுத்தம் செய்வோம்’ என்பதும் எந்த மாதிரி அறிக்கை – யாருக்கு எச்சரிக்கை ? தமிழ்நாடு அரசு இதுபோன்ற எச்சரிக்கைகளை அனுமதிக்கவே கூடாது ! நல்வாய்ப்பாக, மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குநரகம், ‘முன் அனுமதி இன்றி பள்ளிகளை மூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்துள்ளது, நம்பிக்கை அளிக்கிறது. தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு – சங்கத் தலைவர்களுடன் நாளை பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். ஏன் பேச்சுவார்த்தை? குறிப்பிட்ட இந்த விவகாரத்தில் பள்ளியின் நிலைப்பாடு என்ன, அரசாங்கத்தை கேட்டு விட்டா பள்ளித்தரப்பில் முடிவுகளை எடுத்தனர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் இதற்கு முன்னர் கலந்தாய்வு செய்தனரா, இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் மீது என்ன தவறு இருக்கிறது? ‘நாளை முதல் தனியார் பள்ளிகள் மூடப்படும்’ என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் ஆலோசித்து விட்டா அறிவித்தனர்? கள்ளக்குறிச்சியில் பள்ளி மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும் – சொத்துகளை திருடும் செயலும் ஒருபோதும் ஏற்புடையது அல்ல. அரசாங்கமும் இந்த விஷயத்தில் சும்மா இருக்கப் போவதில்லை. கொளுத்தப்பட்டிருக்கும் சக்தி மெட்ரிக் பள்ளியின் சொத்துகளை பைக்கில், சைக்கிளில் மற்றும் தலையில் வைத்து பலர் தூக்கிச் செல்லும் காட்சிகள் யாராலும் ஏற்க முடியாதது! வன்முறையை பயன்படுத்தி சொத்துகளை களவாடும் கும்பலில் ஒருவரைக்கூட போலீஸ் விடக்கூடாது- பள்ளிக்கான இழப்பை கலவர நபர்கள் சொத்திலிருந்தே வசூலித்துக் கொடுக்க வேண்டும். மிக முக்கியம் – சக்தி மெட்ரிக் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்த நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் கல்விக்கான மாற்று ஏற்பாட்டை பள்ளிக்கல்வித்துறை விரைந்து செய்து கொடுக்க வேண்டும்… ந.பா.சேதுராமன்

Exit mobile version