Madras Kural

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4டன் ரேசன்அரிசி பறிமுதல்….

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்குந்து (மினி-லோடு வேன்) ஒன்றை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த சிப்காட் போலீசார், அரிசி கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த ஜோசப் (32) அஜித் குமார் (35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு சரக்கு வாகனங்கள், புறநகர் தொடர் (ரெயில்) வண்டிகள், மட்டுமின்றி, படகுகள் மூலமும் நியாய விலை(ரேசன்) கடை அரிசிகள் கடத்தப்படுவது, தொடர்கதையாகவே இருக்கிறது. சென்னை – திருவள்ளூர் மற்றும் சென்னை புறநகர்களில் இருந்து கடத்தப்படும் நியாய விலைக் கடை அரிசிகள், ஆந்திராவில் உள்ள அதிநவீன அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்டு மீண்டும் 25 கிலோ, 50 கிலோ, 75 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்துக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொன்.கோ.முத்து

Exit mobile version