Madras Kural

சரக்கு ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து தீ – விபத்து! பின்னணியும், தீர்வுக்கான வழிமுறையும்…

“திருவள்ளூரில் சரக்கு ரெயில் பெட்டியில் அணையா – தீ
ரெயில்வே துறையின் அலட்சியமே” என பொதுமக்கள் குற்றச்சாட்டு…

சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை 5 மணியளவில், திருவள்ளூர் மாவட்ட இருளர் காலனி அருகே ரெயில் சென்றபோது இருப்புப்பாதையை விட்டு விலகி தடம் புரண்டது. இந்த திடீர் விபத்தால்
சரக்கு ரெயிலில் பற்றிய ‘தீ’, அணையா ‘தீ’ யாக பிற்பகல் வரை எரிந்து, அந்தப் பகுதியே புகைமூட்டத்தில் மூழ்கியது.

“இப்படியான ரெயில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம், இருப்பு பாதைகள் சரியான சீரமைப்பில் இல்லாமை, உயர் அழுத்த மின்கம்பி பராமரிப்பு பணிகளை முறைப் படுத்தாமை போன்ற காரணங்களே பிரதானமாய் இருக்கிறது”

மேலும், “ரெயில்வே துறை உயரதிகாரிகள் காட்டிவரும் அலட்சியமும் இதுபோன்ற தொடர் விபத்துகளின் பின்னணியில் இருக்கிறது.

ரெயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் போடாமல் பொது பட்ஜெட்டில் அதனை கொண்டு வந்து விட்டதால் போதிய நிதியின்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாகவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர்.

குறைந்த அளவிலான ஆட்களை வைத்துக் கொண்டு, முறையாகவும் – முழுமையாகவும் பணிகளை மேற் கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது. ஆளில்லா ரெயில்வே ‘கேட்’ கள் நாட்டில் பணியிடம் நிரப்பாமலே கிடக்கிறது. மொழி தெரியாத ஆட்களை ‘ கேட் – கீப்பர்’ வேலைக்குப் போட்டு விட்டு, ‘கேட்’ திறந்துள்ளதா, பூட்டியுள்ளதா என்கிற கேள்விக்கே விடைதெரியாதபடி விபத்துகள் நடப்பதும் தொடர்கிறது.

எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்களை சரக்கு ரெயில்களில் கொண்டு செல்லும் போது, எரி பொருட்களுடன் கூடுதல் நீர்த்தொட்டி கொல்கலன்களை அவற்றோடு இணைத்து அதில் தீ அவிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தீயணைப்பு கருவிகளையும், நன்கு திறமையான ஆள்களையும் உடன் கொண்டு போனால் மட்டுமே இதுபோன்ற தீ விபத்துகளை தடுக்க முடியும்” என்கிறார்,
கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்க ரெயில் பயணிகள் நல சங்க நிர்வாகியான தனுஷ்கோடி.

https://madraskural.com/wp-content/uploads/2025/07/1000746961.mp4

தற்போது தீ விபத்து நடந்த இடத்தை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ரெயில்வே ஐ.ஜி. ஏ.ஜி. பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ் ஆய்வு செய்து வருகின்றனர்.

இங்கே காலந்தோறும் குரல் கொடுக்கும் “தனுஷ்கோடி”கள் ஏராளம். அதை செயல்படுத்தி மக்களை காக்கவேண்டியது அரசு அதிகாரிகளும்தான்…

P.K.M.

Exit mobile version