திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஈசான் பெரிய ஏரியில் சவுடு மண் குவாரி நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி 30 முதல் 40 அடி ஆழத்திற்கு ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி, தினமும், நூற்றுக்கணக்கான லாரிகளில் இங்கே சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளுகிறார்கள். அத்துமீறி மணல் அள்ளுவதை மறைக்க அதன் மீது சவுடு மண்ணை பரப்பி குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக மணலைக் கொண்டு செல்லப்படுவது தொடர்கதை என்றே மக்கள் கூறுகிறார்கள். வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகேயே நடைபெறும் இந்த அத்துமீறலை கண்டு கொள்ளாமல் அதிகாரிகள் துணை போவதாகவும் குற்றச்சாட்டு நீள்கிறது. இந்நிலையில், அங்கு சவுடு மண்லோடு ஏற்றிப்போக வந்திருந்த ராக்கம்மா மையம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் மதன்குமார், மண்குவாரி நடக்கும் ஏரியில் அமர்ந்து, மதிய உணவு சாப்பிடடுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, மண்லோடு ஏற்றவந்த ஒருலாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாப்பிட்டுக் கொண்டிருந்த மதன்குமார் மீது மோதியது. அந்த மோதல் விபத்தில் மதன்குமார் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வேண்டும், விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் மண் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்; உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார், “சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும், கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என உறுதி அளித்ததை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். உயிரிழந்த லாரி டிரைவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துவிட்டு வழக்குப் பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
P.K.M